/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவாரிகளை அரசுடமையாக்கினால் வருவாய் கொட்டும்! அரசுக்கு சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் யோசனை
/
குவாரிகளை அரசுடமையாக்கினால் வருவாய் கொட்டும்! அரசுக்கு சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் யோசனை
குவாரிகளை அரசுடமையாக்கினால் வருவாய் கொட்டும்! அரசுக்கு சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் யோசனை
குவாரிகளை அரசுடமையாக்கினால் வருவாய் கொட்டும்! அரசுக்கு சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் யோசனை
ADDED : மே 13, 2025 01:14 AM

கோவை; 'கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர, குவாரிகளை அரசுடமையாக்கி, ஆணையம் அமைக்க வேண்டும்' என, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சேகர் ஆகியோர் கொடுத்த மனு:
கல் குவாரி உரிமையாளர்கள் 'எம்' சாண்ட், 'பி' சாண்ட், ஜல்லிக்கற்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். ஒன்றரை ஆண்டுகளில், கல்குவாரி பொருட்களை யூனிட் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர்.
நான்கு யூனிட் கொண்ட ஒரு லாரி லோடுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இது, 100 சதவீத விலை உயர்வு. கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், கட்டட பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கட்டடம் கட்டும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கட்டுமான வேலைகளும் பாதிப்புக்குள்ளாகி, கட்டுமான தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குவாரிகளை அரசுடமையாக்கினால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். பொதுமக்களுக்கு தரமான கல் குவாரி பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்.
ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்க வேண்டும். கட்டுமான பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். கட்டட அனுமதிக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பிலும், மனு அளிக்கப்பட்டது.