/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு திட்டங்கள், நிதி, தொழில்நுட்பம் தாராளம்; எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர் வரலாம்
/
அரசு திட்டங்கள், நிதி, தொழில்நுட்பம் தாராளம்; எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர் வரலாம்
அரசு திட்டங்கள், நிதி, தொழில்நுட்பம் தாராளம்; எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர் வரலாம்
அரசு திட்டங்கள், நிதி, தொழில்நுட்பம் தாராளம்; எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர் வரலாம்
ADDED : ஜூன் 27, 2025 11:28 PM

கோவை; சர்வதேச எம்.எஸ்.எம்.இ., தினத்தை முன்னிட்டு, இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் (ஐ.சி.ஏ.ஐ.,) சார்பில், நாடு முழுதும், எம்.எஸ்.எம்.இ., துறையை வலுப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு நடந்தது.
வங்கித் துறை சார்ந்தவர்கள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார் நிபுணர்கள், டி.ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அரசுத் துறையினர், தங்களது தரப்பில் இருந்து பல்வேறு பிரிவுகளிலும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையுடன் இணைந்து, துடியலூரில் உள்ள ஐ.சி.ஏ.ஐ., வளாகத்தில் நடந்த கருத்தரங்கை, டி.ஆர்.டி.ஓ., இயக்குநர் (டி.ஐ.ஐ.டி.எம்.,) அருண் சவுத்ரி துவக்கி வைத்தார்.
கருத்தரங்கு தொடர்பாக, ஐ.சி.ஏ.ஐ., கோவை தலைவர் சதீஷ், தென்பிராந்திய குழு உறுப்பினர் ராஜேஷ், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையைப் பொறுத்தவரை, தொழில்முனைவுத் திறன் அபரிமிதமானது. ஆனால், சில சமயங்களில், எம்.எஸ்.எம்.இ., துறையில் புதிதாக தொழில் துவங்குவது, இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது, நிதியாதாரத்தை திரட்டுவது, ஜி.எஸ்.டி., வருமான வரித்துறை நடைமுறைகளைக் கையாள்வது, அரசின் புதிய திட்டங்கள், பல்வேறு மானியங்கள், வங்கிக் கடன்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
உதாரணமாக, கோவை மாவட்டத்தில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கடனை எப்படிப் பெறுவது, டி.ஆர்.டி.ஓ.,வின் புதிய தொழில்நுட்பங்களையும், ஆய்வகங்களையும் எப்படி நமது தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்வது, ஆராய்ச்சிக்காக முழு மானியம் என, பல்வேறு விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் (டேகா) தலைவர் பிரதீப், ஐ.சி.ஏ.ஐ., கோவை செயலாளர் தங்கவேல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்தரங்கில் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.