/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதோகதியில் அரசு கட்டமைப்புகள் : ஆண்டிபாளையம் மக்கள் அதிருப்தி
/
அதோகதியில் அரசு கட்டமைப்புகள் : ஆண்டிபாளையம் மக்கள் அதிருப்தி
அதோகதியில் அரசு கட்டமைப்புகள் : ஆண்டிபாளையம் மக்கள் அதிருப்தி
அதோகதியில் அரசு கட்டமைப்புகள் : ஆண்டிபாளையம் மக்கள் அதிருப்தி
ADDED : டிச 04, 2025 06:37 AM

நெகமம்: நெகமம், ஆண்டிபாளையத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நெகமம் அருகே, ஆண்டிபாளையம் ஊராட்சியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு உள்ள திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை சுற்றிலும் செடிகள் முளைத்தும், கதவுகள் சேதமடைந்தும் உள்ளது.
இதனால், குப்பையை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மையை, சுகாதார பணியாளர்கள் எப்படி செய்கிறார்கள் என்பது அப்பகுதியில் கேள்விக்குறியாகியுள்ளது. திடக்கழிவு மேலாண்மை கூடாரம் அருகில் உள்ள சுய உதவிக் குழு கட்டடம், கிராமப்புற கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு திட்டம் 2014 - 15 வாயிலாக புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது.
அதன்பின், இந்த கட்டடம் பராமரிப்பு செய்யப்படாததால், ஆங்காங்கே கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து, தற்போது இடியும் நிலையில் இருக்கிறது. சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அதன் அருகிலேயே காலி மது பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கிறது. இந்த சுய உதவிக்குழு கட்டடம் முன்பாக இப்பகுதி மக்கள் விளையாட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின், 2024 - 25 வாயிலாக, 41,800 ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி கிரிக்கெட் மற்றும் வாலிபால் மைதானம் அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த மைதானம் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் யாரும் விளையாடுவதில்லை. இவ்வாறு, ஒவ்வொரு கட்டமைப்பும் உபயோகம் இல்லாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டிபாளையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை சீரமைக்க கருத்துரு தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும்.
மேலும், சுய உதவிக் குழு கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதை முழுவதுமாக இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் இருக்கும் செடிகள் விரைவில் அகற்றப்படும்.
இவ்வாறு, கூறினர்.

