/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு டவுன் பஸ் மிகவும் மோசம்: வீடியோ எடுத்து விமர்சனம்
/
அரசு டவுன் பஸ் மிகவும் மோசம்: வீடியோ எடுத்து விமர்சனம்
அரசு டவுன் பஸ் மிகவும் மோசம்: வீடியோ எடுத்து விமர்சனம்
அரசு டவுன் பஸ் மிகவும் மோசம்: வீடியோ எடுத்து விமர்சனம்
ADDED : ஜூலை 29, 2025 07:05 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ் மிகவும் மோசமாக இருப்பதை சுட்டிக் காட்டும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலானது.
பொள்ளாச்சியில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து, 85 அரசு பஸ்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ஒவ்வொன்றும், நாள் ஒன்றுக்கு, 280 முதல் 340 கி.மீ., துாரம் வரை இயக்கப்படுகின்றன.
இந்த டவுன் பஸ்களை நம்பியே, சுற்றுப்பகுதி கிராம மக்கள், அலுவலகம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் டவுன் பஸ்களால், பயணியர் பரிதவித்து வருகின்றனர்.
சில பஸ்களில் இருக்கைகள், ஜன்னல்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உடைந்து காணப்படுகிறது. பழுதான உதிரிபாகங்கள், முறையாக மாற்றம் செய்யப்படாததால், டிரைவர்கள், கண்டக்டர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் இடையே இயக்கப்படும் டி.என். 38 என் 2787 எண் கொண்ட டவுன் பஸ் மிகவும் மோசமாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதனை, ஒவ்வொருவரும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது:
பஸ் பழுதாகி விட்டால், அடுத்தடுத்த 'டிரிப்' கிராமங்களுக்கு இயக்கப்படுவதில்லை. அடுத்த பஸ்சுக்காக காத்திருந்து அவதிப்படுகிறோம். பல டவுன் பஸ்களில், மழையின்போது, தண்ணீர் ஒழுகுவதும், இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாதது, ஸ்டார்ட் ஆகாதது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன. அனைத்து டவுன் பஸ்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.