/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்துறைக்கான கொள்கைகளை அரசுகள் வகுக்கணும்!
/
தொழில்துறைக்கான கொள்கைகளை அரசுகள் வகுக்கணும்!
ADDED : செப் 30, 2025 10:53 PM

ம த்திய, மாநில அரசுகள் தொழில்துறைக்கான கொள்கைகளை வகுக்கணும் என, மறு சுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு (ஆர்.டி.எப்.,) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஆர்.டி.எப்., தலைவர் ஜெயபால் கூறியதாவது:
2022 முதல் காலாண்டுக்குப் பின் சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய தொழில் துறையில் எதிரொலித்தன. இதை எதிர்கொள்ள புதிய தொழில் கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் வகுக்கவில்லை.
சர்வதேச நாடுகளை விட இந்தியாவில் மூலபொருட்கள் 20 சதவீதம் வரை விலை அதிகம்; பிற நாடுகளுடன் ஏற்றுமதியில் போட்டியிட முடியவில்லை.
பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழைகளை இறக்குமதி செய்ய க்யூ.சி.ஓ., பி.ஐ.எஸ்., தரக்கட்டுபாட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த என்ற விதிமுறை உள்நாட்டு கார்ப்பரேட் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. அவை, சர்வதேச விலையை விட அதிக விலைக்கு விற்பதால், இந்தியா 3 ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஜாப் ஒர்க் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்த நிலையில், 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 முதல், கடந்த நான்காண்டுகளில், 63 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறு, சிறு நிறுவனங்களுக்கான தாழ்வழுத்த மின்சாரத்துக்கு நிலைக் கட்டணம் கிலோவாட்டுக்கு ரூ.35 என்பது, 475 சதவீத உயர்வாக ரூ.165 ஆக மாற்றப்பட்டுள்ளது.
பீக் ஹவர் கட்டணம் 15 சதவீதம் கூடுதலாக, டி.ஓ.டி., மீட்டர் பொருத்திய குறு, சிறு நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ளது.
மேற்கூரை சோலாரில் மின் உற்பத்தி செய்து பயன்படுத்தினால், நெட்வொர்க் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 அபராதம் போல விதிக்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் உயரழுத்த மின்சாரத்துக்கு தேவைக் கட்டணம் கிலோவாட்டுக்கு ரூ.350ல் இருந்து ரூ.608 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வரிகளை ஆண்டுதோறும் உயர்த்துவதும், மாநில ஜி.எஸ்.டி., பறக்கும்படையினர், வரி ஏய்ப்பு முகாந்திரம் இல்லாத வாகனங்களை சோதனை என்ற பெயரில், பெரும் அபராதம் விதிப்பதும் சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.