ADDED : மார் 11, 2024 09:34 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், வேளாண் அலுவலகங்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த வளாகத்தில், தாலுகா அலுவலகம் அருகே உள்ள கட்டடத்தில் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் தாலுகா அலுவலக வெளிப்புற சுவற்றிலும் கட்சி, அமைப்புகள் மற்றும் தனியார் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
பொதுமக்கள் கூறுகையில், 'கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், கட்சி ரீதியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மக்கள் பயன் பெரும் வகையில், அரசு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த அறிவிப்புகளை இடம் பெறச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.
