அன்னுார்:அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளி 67 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இங்கு 1,100 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார்.
விழாவில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் சாதித்தவர்கள் மற்றும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தனி நடனம், குழு நடனம், நாடகம், நாட்டியம் என மூன்று மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சாதித்த மாணவ மாணவியருக்கு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பரிசு வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் நாராயணசாமி, கல்விக்குழு உறுப்பினர் பிரேம் தேவா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள், கழிப்பறைகள், சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிய பள்ளி கட்டமைப்பு வசதிக்காக உதவிய முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.