ADDED : ஜன 27, 2026 05:11 AM

போத்தனூர்: குடியரசு தினத்தையொட்டி, க.க.சாவடி அடுத்து மாவுத்தம்பதியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி தலைமையில் கிராம சபை கூட்டம், ஊராட்சி அலுவலகம் அருகே நடந்தது. கலெக்டர் பவன்குமார் பங்கேற்றார்.
இதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, தொழிலாளர் வரவு- - செலவு திட்டம் மற்றும் திட்ட பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் விபரம் உள்ளிட்டவை குறித்து, ஊராட்சி செயலர் உமாமகேஸ்வரி விளக்கினார்.
தூய்மை பணியாளர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். நடனம், குடியரசு தினம் குறித்து பேசிய பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முருகன்பதிக்கு சாலை அமைத்தல், மாகாளிபாறை பகுதியில், 40 பேருக்கு வீட்டு மனை பட்டா, துணை சுகாதார மையம் அமைக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. பல்வேறு துறை அதிகாரிகள், மக்கள் மற்றும் குமரகுரு, ஏ.ஜே.கே.கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
காலை, 11:00 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம், 55 நிமிடங்கள் தாமதமாக கலெக்டர் வந்ததால், மதியம், 1:00 மணிக்கு பிறகே கூட்டம் துவங்கியது.
கலெக்டருக்காக சிறு குழந்தைகள் பூங்கொத்துடன், 30 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்தனர்.
