/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்
ADDED : ஆக 10, 2025 10:30 PM
சூலுார்:
சூலுார் அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை துணை கலெக்டர் கணேசன் மற்றும் அதிகாரிகள், சூலுார் அடுத்த நடுப்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர்.
டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி மூன்று யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்த அதிகாரிகள், மண் கடத்தல் குறித்து புகார் அளித்தனர்.
இதேபோல், பாப்பம்பட்டி குட்டையில், உரிய அனுமதி இன்றி அணுகு பாலம் கட்ட, கிராவல் மண் கொட்டிய லாரியை வி.ஏ.ஓ., லோகநாயகி பிடித்தார். மண்டல தாசில்தார் முத்து மாணிக்கத்துக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற அவர், உரிய அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர் ரமேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.