ADDED : டிச 01, 2024 10:51 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தற்போது, மிளகாய் பறிப்பை துவங்கியுள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் பொட்டையாண்டிபுறம்பு, நெ.10.முத்தூர், சூலக்கல் மற்றும் கிணத்துக்கடவின் ஒரு சில பகுதிகளில் அதிகளவு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பனப்பட்டி மற்றும் மெட்டுவாவி பகுதியில் குறைந்த அளவு மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
ஆண்டுதோறும், கிணத்துக்கடவு வட்டாரத்தில், 100 ஹெக்டேர் வரை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில், தற்போது வரை, 80 ஹெக்டேர் அளவு மிளகாய் சாகுபடி உள்ளது.
விவசாயி நாராயணன் கூறியதாவது: விளைநிலத்தில், கால் ஏக்கரில், மிளகாய் சாகுபடி செய்துள்ளேன். மிளகாய் நாற்று நடவு செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. தற்போது வரை மிளகாய் நான்கு பறிப்பு எடுத்துள்ளோம். வாரம் ஒரு முறை மிளகாய் பறிக்கப்படுகிறது.
ஒரு முறைக்கு, 200 முதல் 225 கிலோ வரை மகசூல் பெறப்படுகிறது. தற்போது வரை நடவு, உரம், வேலையாட்கள் கூலி, மருந்து என பத்தாயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.
மிளகாய் சாகுபடியில், முறையாக தண்ணீர் பாய்ச்சுவதால் பெரிதளவு பாதிப்பு இல்லை. தினசரி மார்க்கெட்டில், மிளகாய் ஒரு கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் விலை உள்ளது. ஒரு கிலோ மிளகாய் 40 ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்பனை ஆனால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு, கூறினர்.