/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அவிநாசி ரோட்டில் மீண்டும் 'கிரீன் காரிடர்'
/
'அவிநாசி ரோட்டில் மீண்டும் 'கிரீன் காரிடர்'
ADDED : ஜன 22, 2026 05:02 AM
கோவை: அவிநாசி ரோட்டில் மீண்டும் கிரீன் காரிடர் திட்டத்தை அமல்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதற்கேற்றார் போல், விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., நீளத்துக்கு, ரூ.1,791 கோடி மதிப்பில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
வாகனங்கள் மேம்பாலத்தை பயன்படுத்த துவங்கியுள்ளதால், அவிநாசி ரோட்டில் போக்குவரத்து சற்று குறைந்துள்ளது. இருப்பினும் லட்சுமி மில்ஸ், நவஇந்தியா, பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இதை தவிர்க்க போலீசார் பல்வேறு பகுதிகளிலும், மீண்டும் 'யு' டர்ன் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இருந்த 'கிரீன் காரிடர்' திட்டத்தை செயல்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகையில், ''மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அவிநாசி ரோட்டில், சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் போது எந்த சிக்னலிலும் நிற்காமல் செல்லலாம். இது 'கிரீன் காரிடர்' எனப்படும். இத்திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 'யு' டர்ன் நடைமுறையும் அமல்படுத்தப்பட உள்ளது,'' என்றார்.

