/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேன்ட்சுக்குள் மறைத்து மளிகைப்பொருட்கள் திருட்டு
/
பேன்ட்சுக்குள் மறைத்து மளிகைப்பொருட்கள் திருட்டு
ADDED : டிச 24, 2024 07:22 AM

கோவை; சூப்பர் மார்க்கெட்டில் பேன்ட்சுக்குள் மறைத்து, மளிகை பொருட்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சிங்காநல்லூர், திருச்சி ரோட்டில் பிரபல நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் இரவு சூப்பர் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ரூ.133 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியதாக பணத்தை செலுத்தி விட்டு, வெளியில் செல்ல முயன்றார். வாசலில் உள்ள ஸ்கேனர் கருவியை கடந்து செல்ல முயன்ற போது, அதிலிருந்து எச்சரிக்கை மணி ஒலித்தது.
அவரை கடை ஊழியர்கள் சோதனை செய்தனர். அதில் அவர் பேன்ட்சுக்குள் டீத்துாள், பூஸ்ட் பாக்கெட்டுகளை மறைத்து எடுத்து சென்றது தெரிந்தது.
தொடர்ந்து, கடை ஊழியர்கள் அவர் மறைத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்தனர். மொத்தம் ரூ.6,136 ரூபாய்க்கான பொருட்கள் அதில் இருந்தன. இதுகுறித்து, சிங்காநல்லுார் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர் கோவைபுதுார் அசோக் நகரை சேர்ந்த விமலராஜா, 60 எனத் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், பின் பிணையில் விடுவித்தனர். இவர் மேலும் பல கடைகளில் திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கப்படுகிறது.