/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூலை 25, 2025 08:44 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், இரு மாதங்களாக, தொடர்ந்து பெய்யும் மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான குளம், குட்டைகள் உள்ளன. இதேபோல, விளைநிலங்களில் கிணற்று பாசனமும் உள்ளது. கடந்த மே மாதம் இறுதியில், வறண்டு காணப்பட்ட நீர்நிலைகளுக்கு, தொடர் மழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அதன் காரணமாக, ராசக்காபாளையம் தடுப்பணை, தேவம்பாடிவலசு குளம், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.
இதையடுத்து, இரு மாதங்களாக, தொடர்ந்து பெய்யும் மழையால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கிணறுகளில், தரைமட்டத்திற்கு நிகராக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்னை மற்றும் காய்கறி சாகுபடிக்கு, தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோன்று, பல பகுதிகளில் மழைநீரை வடித்து விட முடியாததால், காய்கறி, வாழை பயிர்கள் பாதித்துள்ளன.
விவசாயிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், மே மாதத்தில் இருந்தே மழை பெய்கிறது. இதனால், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, பெய்யும் மழையால், கிணறுகளின் நீர்மட்டம், தரைமட்டத்திற்கு நிகராக உயர்ந்துள்ளது. விவசாயப் பணிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வு பேருதவியாக இருக்கும்.
குளம், குட்டைகளுக்கு மழை நீர் சென்றடையும் வகையில் நீர்வழிப்பாதைகளை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மழைநீர் வீணாகாமல் சேமிக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.

