/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டிலிருந்தே வாக்களிக்க குழுக்கள் அமைப்பு
/
வீட்டிலிருந்தே வாக்களிக்க குழுக்கள் அமைப்பு
ADDED : பிப் 11, 2026 05:09 AM
கோவை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஓட்டுச்சாவடி அலுவலர், பார்வையாளர், புகைப்படக் கலைஞர், காவல்துறை அலுவலர் உள்ளிட்ட தலா 5 பேர் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 54 ஆயிரம் பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். மேலும், 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் இவர்களுக்கு சிறப்பு வசதிகள் வழங்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் ( PwD ) என குறிப்பிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 14,600-க்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள் என குறியீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
'பிப்.17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்தல், பணியாளர்கள் நியமனம் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகளும் நடந்து வருகிறது,' என்றனர்.

