/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பனை மரம் வளர்த்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்'
/
'பனை மரம் வளர்த்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்'
ADDED : பிப் 11, 2025 11:53 PM

அன்னுார்; அன்னுார் தாலுகாவில், 10 ஆயிரம் பனை விதை நடும் பணி நேற்று துவங்கியது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தது 'மண்ணும் மரமும்' என்னும் அமைப்பு.
இந்த அமைப்புடன், கவுசிகா நீர்க்கரங்கள், அன்னுார் பேரூராட்சி இணைந்து 10 ஆயிரம் பனை விதைகளை நட முடிவு செய்துள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி அல்லிகுளம் குளக்கரையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் 'மண்ணும் மரமும்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜு பேசியதாவது :
ஐந்து வருடங்கள் வளர்ந்த பனை மரத்தில் ஆயிரம் முதல் 1500 சல்லி வேர்கள் இருக்கும். மழை பெய்யும் போது, இந்த சல்லி வேர்களின் வழியாக மழை நீர் பூமிக்கடியில் சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நுாற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தால், சல்லி வேர்கள் வழியாக செல்லும் மழை நீர் ஒரு பெரிய குளம் போல் பூமிக்கு அடியில் தேங்கி நிற்கும்.இது சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கும். ஒரு வளர்ந்த பனைமரம் 15,000 லிட்டரை மழைக்காலத்தில் பூமிக்கடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது. எனவே, பனை விதை நட வேண்டும். பனை விதை நடவு செய்த எட்டு ஆண்டுகளில் நுங்கு வர ஆரம்பித்து விடும். 120 ஆண்டுகள் இதன் ஆயுட்காலம். பனை விதையின் அடி முதல் உச்சி வரை அனைத்தும் பயன் தரக்கூடியது.
கருப்பட்டி, பதநீர், நுங்கு, நார் என பலவித பொருட்கள் பனைமரத்தில் கிடைக்கிறது. புயல் காலங்களில் பனை மரங்கள் உயிர் வேலி போல் நின்று புயலின் வேகத்தை தடுக்கின்றன. கஜா புயலின் போது பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் புயல் பாதிப்பு குறைவாக இருந்தது. எனவே தமிழக அரசும் தற்போது கடற்கரை ஓரங்களில் பனைமரம் நடுவதற்கு ஊக்குவித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜ் பேசுகையில், ''அன்னுார் தாலுகாவில் 10 ஆயிரம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என்றார்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், அல்லிகுளம் ஏரி பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

