/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எஸ்.டி.யில் சலுகை; வர்த்தகர்கள் வரவேற்பு
/
ஜி.எஸ்.டி.யில் சலுகை; வர்த்தகர்கள் வரவேற்பு
ADDED : செப் 05, 2025 10:01 PM

கோவை:
ஜி.எஸ்.டி., கவுன்சில் 56வது கூட்டத்தில், 5, 12, 18, 28 சதவீதமாக, நான்கடுக்காக இருந்த வரி, 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்காக குறைக்கப்பட்டதற்கு, சிறு, குறு வியாபாரிகள், வர்த்தகர்கள் வரவேற்றுள்ளனர்.
போட்டி போடலாம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்ட செயலாளர் கணேசன்: மளிகை பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., ஐந்து சதவீதத்துக்குள் வருவதால், அவற்றை உற்பத்தியாளர்கள் எளிதாக ஏற்றுமதி செய்யலாம்.
மற்ற நாடுகளுடன் போட்டி போட வசதியாக இருக்கும். புகையிலை பொருட்கள், சிகரெட் ஆகியவற்றுக்கு 40 சதவீதம் வரி விதித்தது நல்லது. ஜி.எஸ்.டி.,யில் சில குறைபாடுகள் உள்ளன; அவற்றை களைய வேண்டும். 2019ல் விற்பனை செய்வதற்காக வாங்கிய பொருட்களுக்கு, அந்த அசெஸ்மென்ட் அடிப்படையில், ஆறு ஆண்டுக்கு பின், தற்போது அபராதம் கட்ட வேண்டும். அதற்கான வித்தியாசத் தொகையை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். இந்த குளறுபடியை நீக்க வேண்டும்.
அமலுக்கு வந்ததும் விலை குறையும் கோயமுத்துார் மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகரன்: மளிகை கடைகளில் விற்பனை செய்யும் தானியங்கள், பருப்பு வகைகளை சில்லறையாக விற்கும்போது வரி விதிப்பதில்லை. அதுவே, ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று பேக்கிங் செய்து விற்பனை செய்தால் ஐந்து சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதிலிருந்து விலக்கு அளித்தால், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும். தற்போது மளிகை பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த பாதம் பருப்புக்கும், சோயாசங்ஸிற்கும் இதுவரை, 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது; ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமலுக்கு வந்தபின், விலை குறையும். மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.
வரவேற்கத்தக்கது கோயமுத்துார் எண்ணெய் வியாபாரிகள் சங்க தலைவர் இருதயராஜா: ஜி.எஸ்.டி.,யில் 15 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த பொருட்களின் விலையை, 5 சதவீதமாக குறைத்தது வரவேற்கத்தக்கது. அரிசி, மளிகை, மசாலா, எண்ணெய் பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. அதற்கான ஜி.எஸ்.டி., ஐந்து சதவீதத்துக்கு மாற்றியிருப்பது நல்லது. இப்பொருட்களை வரிவிதிப்பு இல்லாமல் செய்திருக்க வேண்டும். பன்னீர், நெய் ஆகியவற்றை, 12 சதவீதத்தில் இருந்து, 5 ஆக குறைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வராததால், அதற்கென வரி விதிக்கவில்லை. வரி விதிப்பு செய்தால் மளிகை மற்றும் உணவு பொருட்கள் விலை மேலும் குறையும். மக்களுக்கு வரிச்சுமை ஏற்படாது.
பட்டியல் வெளியிடணும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சந்திரசேகர்: பனீர், பிரட் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி நீக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் பொருட்களுக்கு, 18 சதவீதம் வரிவிதிப்பு இருந்தது. அது நீட்டிக்கப்பட்டதா, விலக்கு அளிக்கப்பட்டதா என்ற விபரம் சொல்லப்பட வில்லை. ஜி.எஸ்.டி.யி ல், 5 மற்றும், 18 என்ற இரு வகை வரி விதிப்பு மட்டுமே உள்ளது என்று சொல்கின்றனர். சிலவற்றுக்கு 40 சதவீத வரியும் விதிக்கின்றனர். என்னென்ன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு என்கிற பட்டியலை வெ ளியிட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.