/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எஸ்.டி. விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி
/
ஜி.எஸ்.டி. விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி
ADDED : டிச 10, 2025 09:25 AM
கோவை: ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதாக, கோவையை சேர்ந்த மூன்று தொழிலதிபர்களை, விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். மூவரும் அதிகாரிகள் முன் நேற்று முன்தினம் ஆஜராகினர். அதில் ஒருவர் பெண் என்பதால், மாலை 6:00 மணிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
இருவரில் ஹரிஹரன், 45 என்பவர், தனக்கு உடல்நிலை சரியில்லை; ஓய்வு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் இருந்த ஒரு அறையில், அவர் ஓய்வு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சென்ற அவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இதுகுறித்து, உக்கடம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தொழில் அதிபரின் கழுத்தில் எவ்வித காயமும் இல்லை. தற்கொலைக்கு முயன்றதற்கான எந்த அடையாளமும் இல்லை. அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்ப, இதுபோன்று நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின், காரணம் தெரியவரும்' என்றனர்.

