/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைப்பு; வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி
/
ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைப்பு; வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைப்பு; வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைப்பு; வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 05, 2025 10:36 PM

கோவை; மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரியை குறைத்திருப்பது குறித்து, கோவையில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
அதன் விபரம்;
ரிஷிகேஷ், மோட்டர் பம்ப் வணிகர்: வரி குறைப்பு என்பது வணிகர்கள், உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியான விஷயம். கோவை போன்ற தொழில் நகரங்களில் இருப்பவர்களின் பொருளாதார கஷ்டம் பாதியாக குறைந்துள்ளது. இன்னும் ஐந்தாண்டுக்கு வரி உயர்வு இல்லாமல் இருந்தால், கோவை மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விடுவர்.
சுகுமார், வணிகர்: வரி குறைப்பு உண்மையில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் என்பது வணிகர்கள் எதிர்பார்க்காதது. வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கு பெரிய சுமை குறைந்துள்ளது.
குணசேகரன், வணிகர்: ஏற்கனவே இருந்த ஜி.எஸ்.டி., வரியில் இருந்து, 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பல பொருட்களுக்கு வரி விலக்கும் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். இன்னும் சில ஆண்டுகளுக்கு வரியை அதிகரிக்காமல் இருந்தால், பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ராஜ்குமார், வணிக மேலாளர்: இன்னும் ஜி.எஸ்.டி., அதிகரிக்குமோ என்று பயந்து கொண்டு இருந்த நேரத்தில், வரி குறைக்கப்பட்டு இருப்பது வியாபாரிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கண்ணன், டயர் விற்பனை வணிகர்: ஜி.எஸ்.டி., வரியை 10 சதவீதம் குறைத்து இருப்பதில், என் போன்ற வியாபாரிகளுக்கு சந்தோஷம். உலக அளவில் ஜி.எஸ்.டி., ஏழு சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற கருத்து உள்ளது. அதனால், 18 சதவீதம் என்பதை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.
ருத்ரா, மெக்கானிக்: என் போன்ற பணியாளர்களுக்கு ஜி.எஸ்.டி., யால் அதிகம் பாதிப்பு இருக்காது. எங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளிகளுக்கு அதிகம் சிரமம் இருக்கிறது.
இந்த வரி குறைப்பு அவர்களுக்கு பெரிய ரிலீப்பாக இருக்கும். மீண்டும் உயர்த்தாமல் இருந்தால் நல்லது.
கவிப்பிரியா, கணக்கர்: சானிடரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது நல்ல விஷயம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரி உள்ளது. அற்கும் வரி விலக்கு கொடுக்க வேண்டும்.
தேவி, கேஷியர்: எந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., வரி என்பது தெரியாமல் குழப்பமாக இருந்தது. இப்போது, 5 மற்றும் 18 சதவீதம் என, இரு வகை வரி மட்டும் இருப்பதால் குழப்பம் இல்லை.
தீபாவளி பண்டிகைக்கு முன் வரியை குறைத்து இருப்பது, வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் சந்தோஷமான விஷயம்.
லோகநாயகி, உணவு விற்பனையாளர்: ஜி.எஸ்.டி., வரி வந்த பின், உணவு பொருட்களின் விலை ரொம்ப அதிகமாகி விட்டது. எங்களை போல் உணவு கடைகள் வைத்து இருப்பவர்களுக்கு அதிக சிரமம் இருந்தது.
இப்போது வரியை குறைத்துள்ளனர். உண்மையில் நிம்மதியாக இருக்கிறது. இதுக்கு மேல் வரியை உயர்த்தாமல் இருந்தால் போதும்.
பேபி ஷாலினி, குடும்பத் தலைவி: மத்திய அரசின் இந்த வரி குறைப்பு மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. முன்பு 18 சதவீதம், 12 சதவீதம் வரி இருந்த பல பொருட்களுக்கு 5 சதவீதமாக வரியை குறைத்துள்ளனர்.
இன்னும் பல பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் மக்களுக்கு மகிழ்ச்சியே.இவ்வாறு, கூறினர்.