/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
/
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
ADDED : அக் 08, 2025 11:39 PM

கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பாலத்துக்கு கோவையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் 6 வழி சாலை உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை, 16 கி.மீ. நீளம் கொண்டது அவிநாசி ரோடு. இதை கோவையின் மத்திய ரேகை என சொல்லலாம். பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. ரங்கவிலாஸ், வரதராஜா மில், ராதாகிருஷ்ணா மில், பயனீர் மில், லட்சுமி மில் என நகரின் வளர்ச்சியோடும், வரலாற்றோடும் பின்னிப் பிணைந்த மில்களும், அவிநாசி சாலையிலேயே அமைந்திருந்தன; அமைந்துள்ளன.
அவிநாசி சாலையை 6வழி சாலையாக மாற்ற, 2006--11 தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. 2008ல் ரூ.30 கோடியில் ரோடு அகலப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆயிரத்துக்கு மேலான மரங்கள் வெட்டப்பட்டன. இயற்கை நேசர்களான கோவை மக்கள், திட்டத்தின் அவசியத்தை உணர்ந்து இருந்ததால் எதிர்ப்பு காட்டவில்லை.
10 சந்திப்புகள், 16 சிக்னல்கள்
உப்பிலிபாளையத்தில் இருந்து நீலாம்பூர் வரை 10 சாலை சந்திப்புகள், 16 சிக்னல்கள் உள்ளன. வாகன பெருக்கம் அதிகரித்ததால், இந்த துாரத்தை கடக்க, 45 நிமிடத்துக்கு மேல் தேவைப்பட்டது. இதை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க அரசு முடிவு எடுத்தது. 2016 ஆகஸ்ட் 4ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ.1,791 கோடி ஒதுக்கீடு
முதல்வர் பழனிசாமி ஆட்சியில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்ட ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டது. 2020 மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. ஹைதராபாத் நிறுவனமான கே.என்.ஆர். கன்ஸ்ட்ரகஷனஸ், 2020 ஆகஸ்ட் 29ல் வேலை தொடங்கியது. 48 மாதங்களில் கட்டுமானம் முடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
2021ல் ஆட்சி மாறியது.
முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தேவைகளுக்கு ஒப்புதல் அளித்து, திட்ட செலவையும் ரூ.1791.23 கோடியாக அதிகரித்தார்.
4 ஏறுதளம், இறங்கு தளம்
4வழி பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில் ஏறுதளங்கள் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில், 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் எனும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பையே தொடர் தொட்டிகளாக அமைத்து வழி நெடுகிலும் கண்ணை கவரும் 4,000 போகன் வில்லா செடிகள் வைத்துள்ளனர். இவற்றுக்கு சொட்டு நீர் பாசனமும், பாலத்துக்கு கீழே உள்ள தோட்டங்களுக்கு தெளிப்பு நீர் பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாசு ஏற்படுத்தாத மின் விளக்குகள் மேலும் கீழும் பொருத்தப்பட்டுள்ளன.
ரோலர்கள் அமைப்பு
பாளம் பாளமாக பொருத்தப்படும் மேம்பாலங்களில் 40, 50 மீட்டருக்கு ஒரு இடைவெளி இருப்பதால், வாகனங்கள் கடக்கும்போது தடக் தடக் என்ற சத்தம் எழுவது உண்டு. இந்த பாலத்தில், சைனஸ் பிளேட் விரிவு இணைப்பு என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடங்களை கடக்கும்போது எழும் ஒலியின் அளவும், அதிர்வும் குறைவாக இருக்கும்.
ஏறு தளம், இறங்கு தளங்களில் பாலத்தின் மேல்பகுதியை அடையும்போது, வாகனங்கள் பக்கவாட்டில் மோதி விபத்து நேராமல் தடுக்க, ரோலர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயரமான பக்கச்சுவர்கள், பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
மழை நீர் வடிகால்
மழை பெய்யும்போது பாலத்தின் மீது விழும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளைகள் வாயிலாக பூமிக்குள் செல்லும் வகையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். ஒன்றரை மீட்டர் அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு, 13 ஆயிரத்து 560 மீட்டர் நீளத்துக்கு திட்டமிட்டனர்; 9115 மீட்டர் நீளத்துக்கு அமைத்துள்ளனர்.