/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
/
மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
ADDED : பிப் 25, 2024 12:57 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவில், இன்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்காக, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.
நேற்று காலை, குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் துாவப்பட்டு வழிபாடு நடந்தது.
குண்டத்துக்கு தேவையான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள், பால் குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, சித்திரத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடந்தது.
இன்று, (25ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. கங்கணம் கட்டி விரதமிருக்கும், 3,000க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். குண்டம் திருவிழாவை காண வரும் பக்தர்கள் வசதிக்காக, குண்டம் மைதானத்தில் தடுப்புகள் அமைத்தும், போக்குவரத்து மாற்றம் செய்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.