/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலைத்துறை வசம் கிராம சாலைகள் ஒப்படைப்பு
/
நெடுஞ்சாலைத்துறை வசம் கிராம சாலைகள் ஒப்படைப்பு
ADDED : பிப் 06, 2025 08:51 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கிராம மக்களின் போக்குவரத்து வசதியை அதிகரிக்க கிராம சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது.
இதேபோல, பிரதான தொழிற்சாலைகள், வேளாண் சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், வட்டார தலைமையகம் அமைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், கிராமங்களை நகரப் பகுதியோடு இணைக்கும் சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டும் வருகின்றன. அவ்வகையில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பொள்ளாச்சி- வால்பாறை சாலை முதல் பாலமநல்லுார் வழியாக, பக்கோதிபாளையம் சாலை (4.46 கி.மீ., நீளம்), பொள்ளாச்சி - வால்பாறை சாலை முதல் ஜமீன்கோட்டாம்பட்டி வழி வஞ்சியாபுரம் சாலை (3.20 கி.மீ., நீளம்), ரங்கசமுத்திரம் முதல் மாக்கினாம்பட்டி சாலை (2.98 கி.மீ., நீளம்) கிராம சாலைகள், நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
துறை சார்ந்த அனுமதிக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ''நெடுஞ்சாலை வசம் சாலை ஒப்படைக்கப்பட்டால் அதற்கேற்ப விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டு, புதிதாக தார் சாலை அமைக்கப்படும். தேவையான இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும்,' என்றனர்.