/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தித்திக்கும் தீபாவளி! அளவாக இனிப்பு சாப்பிட்டால் ஆனந்தமாக கொண்டாடலாம்!
/
தித்திக்கும் தீபாவளி! அளவாக இனிப்பு சாப்பிட்டால் ஆனந்தமாக கொண்டாடலாம்!
தித்திக்கும் தீபாவளி! அளவாக இனிப்பு சாப்பிட்டால் ஆனந்தமாக கொண்டாடலாம்!
தித்திக்கும் தீபாவளி! அளவாக இனிப்பு சாப்பிட்டால் ஆனந்தமாக கொண்டாடலாம்!
ADDED : அக் 30, 2024 11:54 PM

கோவை : 'இந்த பொழப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது...'
- - எப்.எம்.,ல் ஒலித்துக் கொண்டிருந்தது இளையராஜாவின் இசை.
சத்தமில்லாமல் பட்டாசு வெடிப்பதை எப்படி நினைத்துக்கூட பார்க்க முடியாதோ, அதே போன்றதுதான், இனிப்பு சாப்பிடாத தீபாவளி.
தீபாவளியான இன்று, நம் வீட்டில் தயாரிக்கும் இனிப்புகள் மட்டுமின்றி, பக்கத்து வீடு, எதிர்வீடு, மேல் வீடு, கீழ் வீடு, நண்பர்கள், உறவினர் வீடுகள், ஆபீசில் கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்...இப்படி சுற்றி, சுற்றி இனிப்பு நம்மை இன்ப இம்சைக்கு உள்ளாக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கோ இது ஒரு சவால் ஆன நாள்.
'ஒரு நாள் தானே... சாப்பிட்டா என்ன ஆகப்போகுது, ரெண்டு மாத்திரையை கூடுதலா போட்டா போச்சு. இல்லை, ரெண்டு யூனிட் இன்சுலின் கூடுதலா போட்டா போச்சு'
இப்படித்தான் பல சர்க்கரை நோயாளிகளும், நினைத்துக் கொள்கின்றனர்.
இப்படி நினைப்பது தவறு. இதனால், பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என, சீனியர் சர்க்கரை நோயாளிகள் எச்சரிக்கின்றனர்.
ஆனால், இதனால் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை என, கோவை அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் சிகிச்சை துறை தலைவர் வென்கோ ஜெயபிரசாத் 'கூலாக' கூறுகிறார்.
அவர் கூறியதாவது:
சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், இதை உட்கொள்ள கூடாது, அதை உட்கொள்ளக்கூடாது என கட்டுப்பாடு இல்லை. மாவுச்சத்துக்கள், இனிப்புகள் திடீரென சர்க்கரை அளவை கூட்டி விடும் என்பது உண்மைதான்.
அதற்கு ஏற்றார் போல், இணை உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். நம் சர்க்கரை அளவை உணர்ந்து உட்கொள்ள வேண்டும்.
இனிப்பு மட்டுமின்றி, காரத்தை அதிகம் உட்கொண்டாலும், சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாள் இனிப்புகளை உட்கொள்வதால், பெரிதாக பாதிப்பும் ஏற்படாது. ஒவ்வொரு இனிப்புக்கும் ஒரு கலோரி மதிப்பு உள்ளது.
பொதுவாக இனிப்பு என்றால், 100 கிராம் இனிப்பில், 400 கலோரி இருக்கும். எடுத்துக் கொள்ளும் இனிப்பின் அளவை பொருத்து, கலோரி மதிப்பிடப்படும். இனிப்பின் அளவை பொறுத்து மாத்திரைகள், இன்சுலின் ஊசியை சமப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு இல்லை என்ற தவறான எண்ணத்தில் உட்கொள்ளும் போது தான் பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இனிப்புகள் என, விற்பனை செய்யப்படும் இனிப்புகளை உட்கொள்ளும் போது, உடல்நலக்கேடு ஏற்படுகிறது.
இத்தகைய இனிப்புகளில் இனிப்பு, மாவு மற்றும் எண்ணெய் ஆகியவற்றில் உள்ள கலோரிகள் அனைத்தும் உடலுக்குள் செல்லும் போதுதான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
எந்த ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தாலும், தன்னிலை தெரிந்து நடந்து கொண்டால் நல்லது. நமக்கு ஏற்ற அளவிலான இனிப்பை உட்கொண்டால் கவலை இல்லை.
இனிப்பு பொட்டலங்களில் மூலப்பொருட்கள், அவற்றின் கலோரி மதிப்பு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் இனிப்புகளை உட்கொள்ளலாம். டாக்டரின் அறிவுரைப்படி உட்கொண்டால் இன்னும் சிறந்தது.
குழந்தைகளை பொறுத்தவரை டைப்1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கட்டுப்படுத்தக் கூடாது. இதனால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அவர்கள், இனிப்பில் உள்ள கலோரி அளவை தெரிந்து உட்கொள்வது சிறந்தது.
உடலில் அதிகளவு சர்க்கரை அதிகமாகி, அமிலமாக மாறி பாதிப்பு ஏற்படுகிறது. தீபாவளிக்குப் பின் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். சாதாரண நாட்களில் வரும் நோயாளிகளை விட, இதுபோன்ற பாதிப்புகளால், 10 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆகவே, நம் வயது, உடல்நிலை, ரத்தத்தில் தற்போதைய சர்க்கரை அளவு, உட்கொள்ளும் இனிப்பில் அடங்கியுள்ள கலோரி அளவு ஆகியவற்றை அறிந்து, அதற்கேற்ப அளவாக உட்கொண்டால், கவலைப்பட வேண்டியதில்லை. தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.