/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எடைக்கு போனதா' தடைச்சட்டம்? பொது இடங்கள் நாறடிப்பு; நடவடிக்கை எப்போது?
/
'எடைக்கு போனதா' தடைச்சட்டம்? பொது இடங்கள் நாறடிப்பு; நடவடிக்கை எப்போது?
'எடைக்கு போனதா' தடைச்சட்டம்? பொது இடங்கள் நாறடிப்பு; நடவடிக்கை எப்போது?
'எடைக்கு போனதா' தடைச்சட்டம்? பொது இடங்கள் நாறடிப்பு; நடவடிக்கை எப்போது?
ADDED : ஜூன் 04, 2025 08:31 PM
தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (உருமாற்றம் தடுப்பு) சட்டம், 1959 பிரிவு, 3 மற்றும் 4ன் படி, நகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், சாலைகள் மற்றும் இடங்களில், ஆட்சேபிக்கத்தக்க வகையில் விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். அனுமதியில்லாமல் விளம்பரம் செய்தால், மூன்று மாத கால சிறை தண்டனை, 200 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சட்டத்தையும், விதிமுறைகளையும் யார் பின்பற்றுகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
பொள்ளாச்சி நகராட்சியில் நகரின் அழகை பாதுகாக்கும் வகையில், கடந்த, 2022ம் ஆண்டு முக்கிய ரோடுகளில் உள்ள அனைத்து சென்டர் மீடியன்களிலும் போஸ்டர் ஒட்டுவதும், சுவர் விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டது. மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனத்தார், இஷ்டம் போல் போஸ்டர் ஒட்டுவதையும், விளம்பரம் எழுதுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலம், நடை மேம்பாலம், ரவுண்டானா, சென்டர்மீடியன் என, எந்த இடத்தையும் விட்டு வைக்காமல், அரசியல் கட்சியினர் தங்கள் நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள், தலைவர்கள் வருகை என கொடிகள், பேனர்கள் கட்டுவதுடன், போஸ்டர்கள் ஒட்டி அலங்கோலப்படுத்துகின்றனர். இதில், அரசியல் கட்சியினருக்குள் போட்டி ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும், சுவர் விளம்பரமும், போஸ்டர் ஒட்டுவதும், பிளக்ஸ் வைப்பதும் அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சியில், கோட்டூர் ரோடு, பாலக்காடு ரோடு ரயில்வே மேம்பாலம், உள்ளிட்ட பல பகுதிகளில் விளம்பரம் எழுதப்படுவது தொடர்கதையாகி விட்டது. அரசுப்பள்ளிகள் சுவர்களில், அரசியல் கட்சி போஸ்டர்களுடன், சினிமா பட போஸ்டர்களும் போட்டி போட்டு ஒட்டப்பட்டு அலங்கோலமாக மாறியுள்ளது.
சுவர் விளம்பரம், பிளக்ஸ்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தும், கட்சியினர் எழுத்து பூர்வமாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்த நிலையிலும், கட்சி மேலிடத்தை கவரவும், சுய விளம்பரத்துக்காகவும் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.
*வால்பாறையில் சமீப காலமாக அரசியல் கட்சியினர், பயணியர் நிழற்கூரையிலும், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உள்ள தடுப்பு சுவர்களிலும் விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், அந்த இடம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
ஆழியாறில் இருந்து வால்பாறை வரையிலும், பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பு சுவர்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இந்த அத்துமீறலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
சாலையோர சுவர் விளம்பரங்களால் வாகன ஓட்டுநர்கள் கவன சிதறலுக்கு உள்ளாகின்றனர். மலைப்பகுதியில் அரசு சுவர்களில் விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
*கிணத்துக்கடவில், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், மேம்பால தூண்கள், ரயில்வே பாலம் மற்றும் பொது இடங்களில், தனியார் விளம்பரங்கள், அரசியல் கட்சி போஸ்டர்கள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளது.
மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு இருந்தும், அத்துமீறி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால், திரும்பிய பக்கமெல்லாம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்த போஸ்டரை மாதம் தோறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றுகின்றனர். யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதை, தவிர்க்க, மேம்பால தூண்களில் மக்களுக்கான பொது விழிப்புணர்வு வாசகங்கள், ஓவியங்கள் வரைய வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினார்கள்.
- நிருபர் குழு -