/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓலை பட்டாசு வெடிச்சிருக்கீங்களா?
/
ஓலை பட்டாசு வெடிச்சிருக்கீங்களா?
ADDED : அக் 19, 2025 10:55 PM

கோவை: தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடைகளுக்கு அடுத்தபடியாக பட்டாசுகளுக்கு தனி இடம் உண்டு. இன்று ரசாயனங்களை பயன்படுத்தி, தயாரிக்கும் பட்டாசு பயன்பாடு அதிகரித்துள்ளது.இவை வரும் முன், கிராமங்களில் தயாரிக்கப்படும் நாட்டு பட்டாசுகளே, பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்தன. இவை அதிக ஒலி எழுப்பக்கூடியவை என்றாலும், சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவையாக இருந்தன.
ஓலை பட்டாசு பனை ஓலையில், கரி, குறைந்தளவு பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பட்டாசு அதிக ஒலி எழுப்பாது. புகையும் அதிகளவு வெளிப்படாது. பனை ஓலையில் தயாரிக்கப்படுவதால், ஓலைப்பட்டாசு எனப் பெயர் பெற்றது.
பனை ஓலையில் தயாரிக்கப்படுவதால் சுற்றுசூழல் மாசும் குறைந்தளவே இருக்கும். அதிக வெப்பம் வெளிப்படாது. 10 ஆண்டுகளுக்கு முன் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பட்டாசு, தற்போது தயாரிக்கப்படுவதே இல்லை.
பொட்டு வெடி எவ்வளவுதான் வெடிகளும், மத்தாப்புகளும், லட்சுமி வெடிகளும், யானை வெடிகளும், பாம்பு மாத்திரைகளும் வாங்கினாலும், பொட்டுவெடி இல்லாத தீபாவளி, தீபாவளியாக இருக்கவே முடியாது.
ஒருகாலத்தில் பொட்டு வெடிகள் தனித்தனியான பட்டாசுகளாய்த்தான் இருந்தன. மேலும் கீழும் சிவப்பு நிறக் காகிதத்தின் நடுவே, சின்னதாக ஒரு புள்ளிபோல புடைத்திருக்கும். இதை வளையங்களுடன் கூடிய போல்டின் நடுவில் வைத்து தரையில் வீசும் போது 'பட்' என, வெடிக்கும்.
ஒரு பொட்டு பட்டாசை எடுத்து, சொரசொரப்பான தரையில் உராய வைத்து வெடிக்க வைத்து கெத்து காட்டுவது, அன்றைய மாணவர்களுக்கு பழக்கம். இன்று இவை அதிகளவில் தயாரிக்கப்படுவதில்லை.
சணல் வெடி சணல் வெடிகள் பொதுவாக, நாட்டு வெடி வகைகளில் ஒன்று. தீபாவளி பண்டிகையில் இது மிகவும் பிரபலம், இந்த சணல் வெடிகள் அதிக சத்தத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் தரமான சணல் வெடிகள் தண்ணீரிலும் வெடிக்கும் தன்மை கொண்டவை. இந்த வெடிகளால், அதிக விபத்து ஏற்பட்டதால் தற்போது தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி பல நாட்டு பட்டாசுகள், பயன்பாட்டில் இல்லை என்றாலும், இன்றும் நம் நினைவுகளில் மத்தாப்பூவாய் மலர்கின்றன.