/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையம் மூடல்; அடிப்படை வசதியில்லை! எம்மேகவுண்டம்பாளையத்தில் பிரச்னைகள் ஏராளம்
/
சுகாதார நிலையம் மூடல்; அடிப்படை வசதியில்லை! எம்மேகவுண்டம்பாளையத்தில் பிரச்னைகள் ஏராளம்
சுகாதார நிலையம் மூடல்; அடிப்படை வசதியில்லை! எம்மேகவுண்டம்பாளையத்தில் பிரச்னைகள் ஏராளம்
சுகாதார நிலையம் மூடல்; அடிப்படை வசதியில்லை! எம்மேகவுண்டம்பாளையத்தில் பிரச்னைகள் ஏராளம்
ADDED : பிப் 13, 2025 09:50 PM

நெகமம்; நெகமம், எம்மேகவுண்டம்பாளையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி, மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் ஊராட்சி, எம்மேகவுண்டம்பாளையத்தில், தண்ணீர், ரோடு, பஸ், மருத்துவம், நிழற்கூரை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்திலுள்ள, மதுரை வீரன் கோவில் தெருவில் அரசு துணை சுகாதார நிலையம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால், கட்டடத்தின் உள்பகுதியில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போன்று காட்சியளிக்கிறது.
மேலும், இந்த வளாகத்தில், அரச மரம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த சுகாதார நிலையம் தற்போது செயல்படுவதில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதுடன், நல்லட்டிபாளையம் அல்லது நெகமம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.
வெளிச்சம் தேவை
இந்த வளாகத்தின் வெளிப்புறத்தில் பொது தண்ணீர் குழாய் உள்ளது. இதை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளது. தண்ணீர் குழாய் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் மக்கள் கீழ் இறங்கி தண்ணீர் எடுத்து வர சிரமப்படுகின்றனர்.
இந்த துணை சுகாதார நிலையத்தின் அருகே உள்ள பகுதியில், ஐந்து ஆண்டுகளாக பழுதடைந்த இரண்டு தெரு விளக்குகள் உள்ளது. தற்போது வரை சீரமைப்பு செய்யப்படவில்லை. இதனால், இந்த ரோட்டில் இரவு நேரத்தில் மக்கள் பலர் பயணிக்க அச்சப்படுகின்றனர்.
இங்கு அமைக்கப்பட்ட போர்வெலில், தண்ணீர் இருந்தும், உபயோகிப்பது இல்லை. இதனால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
பஸ் வருவதில்லை
இதுமட்டும் இன்றி இங்கு உள்ள நிழற்கூரை மேல் பகுதி சேதமடைந்துள்ளது. மக்கள் நிழற்கூரைக்கு வெளியே காத்திருக்கும் நிலை உள்ளது. மழை மற்றும் வெயில் நேரத்தில் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கொரோனா காலத்துக்கு முன், காலை 5:00 மற்றும் 5:45 மணிக்கு பஸ் வசதி இருந்தது. அந்த பஸ்சில் மக்கள் தினசரி வேலைக்கு சென்று வந்தார்கள். கொரோனாவுக்கு பின் இந்த டிரிப்பும் பஸ் வருவதில்லை. இரவு நேரத்தில், 9:00 மணிக்கு வரும் பஸ் வருவதில்லை.
மதுரை வீரன் கோவில் வீதியில் குழந்தைகள் விளையாட, ஊஞ்சல், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இவைகள் பராமரிப்பின்றி துருப்பிடித்து காட்சியளிக்கிறது. இதனால், குழந்தைகள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
செவி மடுக்க ஆளில்லை
மக்கள் கூறியதாவது:
அடிப்படை வசதிகள் இல்லாததால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலையத்தில், பிரசவம், மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆனால், இந்த கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. தற்போது இங்கு பாம்புகள், நாய் போன்ற ஜீவராசிகள் தான் உள்ளது.
துணை சுகாதார நிலையம் அருகே இருக்கும் தண்ணீர் குழாயை ரோட்டின் ஓரம் அமைத்து தர ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டதற்கு, குழியை வெட்டி தருமாறு பொதுமக்களிடம் கூறுகின்றனர். தெருவிளக்கு பழுதடைந்து ஐந்து ஆண்டுகளாகியும் இன்று வரை சரி செய்யவில்லை.
பஸ் பிரச்னை குறித்து மக்கள் தொடர்பு முகாமில் மனு அளித்தோம். எந்த பயனும் இல்லை. பொது இடத்தில் இரண்டு போர்வெல்லில் தண்ணீர் உள்ளது. ஆனால் உபயோகப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.
குழந்தை விளையாடும் இடத்தில் உபகரணங்கள் துருப்பிடித்தும், செடிகள் வளர்ந்து புதராகவும் உள்ளது. கிராமத்தில் நிலவும் பிரச்னைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்கள் நலன் கருதி விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.