/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் ஆரோக்கியத்தை பாருங்க ! மார்பக புற்றுநோய் உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ
/
குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் ஆரோக்கியத்தை பாருங்க ! மார்பக புற்றுநோய் உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ
குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் ஆரோக்கியத்தை பாருங்க ! மார்பக புற்றுநோய் உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ
குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் ஆரோக்கியத்தை பாருங்க ! மார்பக புற்றுநோய் உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ
UPDATED : அக் 12, 2025 01:30 AM
ADDED : அக் 11, 2025 11:08 PM

தினமலர் நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம்- நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது. ஏராளமான வாசகர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். டாக்டர் எழில்செல்வன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கேள்வி: 'பயாப்சி' செய்வதால் புற்றுநோய் பரவுவதாக கூறுகின்றார்களே ?
பதில்: முற்றிலும் தவறானது. மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அறிய முதலில் மேமோகிராம் எனும் பரிசோதனை செய்வோம். அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் இரண்டாவதாக பயாப்சி செய்யப்படும். இது, புற்றுநோய் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும், அதன் பரவல் தன்மை அறியவும் செய்யப்படுகிறது. இதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை முறைகள் தீர்மானிக்கப்படுகிறது. பயம் இல்லாமல் பயாப்சி செய்துகொள்ளலாம்; இதனால், புற்றுநோய் பரவாது.
கேள்வி: என் குடும்பத்தில் மார்பக புற்றுநோய்க்கான எந்த வரலாறும் இல்லை. எனக்கு வரும் வாய்ப்பு உண்டா ?
பரம்பரை வழியாகத்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 30-40 வயதினர் கூட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இதனால், 40 வயது முதல் அறிகுறி இருந்தாலும், இல்லை என்றாலும் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.
கேள்வி: மார்பக புற்றுநோய் வந்துவிட்டாலே மார்பகங்களை அகற்ற வேண்டுமா ?
30, 40 ஆண்டுக்கு முன் வரை, சின்ன கட்டியாக இருந்தாலும் மார்பகத்தை முற்றிலும் அகற்றும் சூழல் இருந்தது. தற்போது, ஆராய்ச்சி பல மேற்கொள்ளப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சின்ன கட்டிகளுக்கு முழுமையாக அகற்றவேண்டிய தேவையில்லை; அந்த கட்டியுள்ள பகுதியை மட்டும் எடுத்தால் போதுமானது.
கேள்வி:மார்பக புற்றுநோய் சிகிச்சையில் அதிநவீன சிகிச்சை என்னவெல்லாம் வந்துள்ளது
முன்பு 4 செ.மீ., 5 செ.மீ., கட்டிகள் உள்ள பகுதியை எடுக்கும் போது, அந்த மார்பக வடிவமைப்பு மற்றும் அளவு சரியாக இருக்காது. இதனால், முழுமையாக மார்பகம் அகற்றும் படி இருந்தது. தற்போது, பிரெஸ்ட் ஆன்கோ பிளாஸ்டி எனும் டெக்னிக் பயன்படுத்துகின்றோம். இதில், மார்பக புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி ஒருங்கிணைந்து மேற்கொள்கிறோம்.
இதனால், மார்பகத்தின் பகுதியை எடுத்தாலும்; அதன் அளவு, வடிவமைப்பில் மாற்றம் இல்லாமல் முன்பு இருந்தது போன்று கொண்டுசொல்ல இயலும். இது முற்றிலும் பாதுகாப்பானது.
கேள்வி: மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வருமா !
கட்டாயம், ஆண்களுக்கும் வரலாம். பெண்களுக்கு பொதுவானது. ஆண்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் டாக்டரை கட்டாயம் சந்திக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்தால் அவர்கள் கட்டாயம் மரபணு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.