/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனிதநேய வார விழா கண்காட்சியில் ஆரோக்கியமான அழகி... ஆபத்தான அழகு!
/
மனிதநேய வார விழா கண்காட்சியில் ஆரோக்கியமான அழகி... ஆபத்தான அழகு!
மனிதநேய வார விழா கண்காட்சியில் ஆரோக்கியமான அழகி... ஆபத்தான அழகு!
மனிதநேய வார விழா கண்காட்சியில் ஆரோக்கியமான அழகி... ஆபத்தான அழகு!
ADDED : ஜன 25, 2024 06:42 AM

கோவை : மனிதநேய வார விழாவை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், நேற்று கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.இதை கலெக்டர் கிராந்திகுமார் திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, விடுதியில் தங்கிப் படிப்போருக்கு வழங்கும் விளையாட்டு பொருட்கள், இ-லைப்ரரிக்கு வழங்கியுள்ள கம்ப்யூட்டர் உபகரணங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், சத்தான உணவு வகைகள் பட்டியலிடப்பட்டு உணவு பொருட்கள் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டன.
தானியங்களால் செய்திருந்த குடை, இரும்புச்சத்து வீடு மற்றும் பிரமிடு போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தது. 'ஆரோக்கியமான அழகி' என்ற பெயரில், தானியங்கள் மற்றும் காய்கறி உட்கொள்வது; 'ஆபத்தான அழகு' என்ற பெயரில் பாக்கெட் உணவு உட்கொள்வதை விளக்கும் வகையில், இரு பொம்மைகளை அருகருகே அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதிகள் மற்றும் கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கும் நாட்டியம், நாடகம் மற்றும் பேச்சுப்போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகள், இன்று (25ம் தேதி) நடத்தப்படுகின்றன.
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மூலம், மேல்நிலை வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு சென்று கலந்துரையாடி, தேநீர் விருந்துடன் மனமகிழ் நிகழ்ச்சி, நாளை நடத்தப்படுகிறது.
வரும், 30ம் தேதி பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், நிறைவு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.