/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சியால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்
/
ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சியால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்
ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சியால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்
ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சியால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்
ADDED : பிப் 07, 2025 10:04 PM

மேட்டுப்பாளையம்; ஜி.பி.எஸ்., உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு ஆயுர்வேதத்தில் சொன்னது போல் தினச்சர்யா, தாதுக்கள் சமநிலை, இரவு நேர விருந்துகளை தவிர்ப்பது நல்லது என ஆயுர்வேத மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, தோலம்பாளையம் அரசு ஆயுர்வேத மருத்துவர் மேகலை கூறியதாவது:-
சமீப காலமாக சில இடங்களில் ஜி.பி.எஸ்., நோய் பரவி வருகிறது. இது ஒரு வைரஸ் வியாதி தான். தசைகளை செயலிழக்க வைத்து, கை, கால்கள் அசைக்க முடியாமல் செய்கிறது. இது தொற்று வியாதி கிடையாது.
வைரஸ் நோய்களை தடுக்க, நாம் நம் எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஆயுர்வேதத்தின் தினச்சர்யா உதவும். தினசரி காலை 4.30 முதல் 5.30 மணிக்குள் எழ வேண்டும். பின் காலைக் கடனை முடிக்க வேண்டும். வேம்பு, ஆல், மருதமரம் போன்ற ஏதாவது ஒன்றின் குச்சிகளை கொண்டு பல் துவக்க வேண்டும். இரவில் சீக்கிரம் உறங்க வேண்டும்.
காலையில் அதிகமாகவும், மதியம் குறைந்த அளவும், இரவில் அதைவிட குறைந்த அளவும் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்வதால் நமது ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட்டு, கழிவுகளை வெளியேற்றி நம் உடலுக்கு தேவையான சக்திகளை கொடுக்கிறது. இரவு நேர விருந்தில் பிரியாணி போன்ற உணவு பொருட்களை சாப்பிடுவதால் நமது ஜீரண மண்டலம் பாதிப்படுகிறது. மலச்சிக்கல் உண்டாகிறது. எதிர்ப்பு சக்தி குறைகிறது.
எளிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான சாப்பாடு போன்றவற்றின் வாயிலாக நாம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். மைதா உணவு, எண்ணெய் அதிகமான உணவு, உப்பு, புளி, காரம் அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
நம் உடலில் பிளாஸ்மா, ரத்தம், தசைகள், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, இனப்பெருக்க திரவம் உள்ளிட்ட 7 தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தாதுக்களுக்கு இடையிலான சமநிலை முக்கியம். ஒரு தாதுவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றொன்றில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வைரஸ்கள் நம்மை எளிதாக தாக்குகிறது.
திரிபலா சூரணம், அஜீரணம், மலச்சிக்கல், செரிமான பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. இதனால் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது. அதே போல் திரிகடுகு சூரணம், அஸ்வகந்தா லேகியம், சியவன்ப்ராஷ் லேகியம் உள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இந்த மருந்துகளை உட்கொள்ள கூடாது. காய்ச்சல், அதிக காய்ச்சல், கை, கால் அசைக்க முடியாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.-------