/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரத்தில் குவியல்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
/
சாலையோரத்தில் குவியல்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : மே 01, 2025 11:31 PM

வால்பாறை; வால்பாறையில், சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள மண் குவியல்களால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில், புதியதாக கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இந்நிலையில் இடிக்கப்பட்ட பழைய கட்டட கழிவுகளை, லாரியில் கொண்டு வந்து பொள்ளாச்சி செல்லும் சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாததால், சாலையோரங்களில் விதிமுறை மீறி மண் உள்ளிட்ட கட்டட கழிவு குவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து பழைய வால்பாறை செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், கட்டடக்கழிவு மண் குவிக்கப்பட்டுள்ளன. மழை பெய்யும் போது, அந்த மண் சாலையில் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துள்ளாகின்றனர். மேலும் சாலையோரம் கொட்டப்படும் மண் குவியலால், வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்துள்ளாகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், சாலையோரங்களில் விதிமுறையை மீறி கட்டடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கழிவு மண் கொட்டும் லாரியை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.