/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனதை கவரும் கொலு பொம்மைகள் சர்வோதயா சங்கத்தில் விற்பனை
/
மனதை கவரும் கொலு பொம்மைகள் சர்வோதயா சங்கத்தில் விற்பனை
மனதை கவரும் கொலு பொம்மைகள் சர்வோதயா சங்கத்தில் விற்பனை
மனதை கவரும் கொலு பொம்மைகள் சர்வோதயா சங்கத்தில் விற்பனை
ADDED : ஆக 22, 2025 11:43 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சர்வோதயா சங்கத்தில் விற்பனைக்காக கொலு பொம்மைகள் வந்துள்ளன.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், நவராத்திரி என்றும், வடமாநிலத்தில் தசரா, துர்கா பூஜை என்ற பெயரிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா ஒரு நாள் மட்டுமல்ல, ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர்.
ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கி சிறப்பாக நடக்கும். நவராத்திரி விழா அனைத்து விதத்திலும் சிறப்பு பெற்றுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு பொம்மைகள் வீடுகளில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.
செப்., 22ம் தேதி நவராத்திரி விழா துவங்கும் நிலையில், தற்போதே நவராத்திரி விழாவுக்காக கொலு பொம்கைள், சர்வோதயா சங்கத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இது எல்லாம் புதுசு பிட்டுக்கு மண் சுமந்த சிவன் என்பதை உணர்த்தும் வகையில், 'செட் பொம்மைகள்' பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. அது போன்று, ராமர் பாலம் 'செட்' பொம்மைகள், பள்ளி கூடத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போன்ற, 'செட்' பொம்மைகள் அதிகளவு வந்துள்ளன.
விதவிதமாக பொம்மைகள், மகாத்மா காந்தியடிகள், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், விவேகானந்தர் என பலவிதமான பொம்மைகள் உள்ளன.இதுபோன்று கடவுள் சிலைகள் ஒவ்வொன்றும் புதியதாக வந்துள்ளன.
பொள்ளாச்சி சர்வோதயா சங்கத்தினர் கூறுகையில், 'ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறும் மாதத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்படும். மக்கள், முன்கூட்டியே பொம்மைகள் வந்தால் வாங்க எளிதாக இருக்கும் என்பதால், ஒரு மாதத்துக்கு முன்பே விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
60 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை சிலைகளும், 'செட்' பொம்மைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்,' என்றனர்.