/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் உணவு பழக்கத்தில் மாற்றம் தேவை
/
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் உணவு பழக்கத்தில் மாற்றம் தேவை
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் உணவு பழக்கத்தில் மாற்றம் தேவை
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் உணவு பழக்கத்தில் மாற்றம் தேவை
ADDED : ஏப் 01, 2025 10:32 PM
பொள்ளாச்சி, ;கோடை வெயிலுக்கு ஏற்ப, உணவு பழக்க வழங்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று, பகலில், 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் அதிகரித்த நிலையில், உடலின் வெப்பம் அதிகரித்து, பலரும் பாதிக்கின்றனர்.
குறிப்பாக, வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு எனப் பல்வேறு வெப்ப நோய்களுக்கு பலரும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தால், வெப்ப நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது:
தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால், சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதற்கு, வெயிலில் அலைவதைக் குறைத்து, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதேபோல, வியர்வையை அவ்வப்போது துடைத்து உடலை சுத்தமாக பராமரிக்காவிட்டால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில், சமைத்த உணவு வகைகள் விரைவாகக் கெட்டுவிடும். அவற்றில் நோய்க் கிருமிகள் அதிகளவில் பெருகும். இந்த உணவை தவிர்ப்பதன் வாயிலாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து தப்பலாம்.
மாறாக, ஒவ்வொரு வேளைக்கு ஏற்றாற்போல் சமைத்த உணவை உடனுக்குடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீராகாரங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. குறிப்பாக, இளநீர், பழச்சாறு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.

