/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை
ADDED : ஜூலை 07, 2025 11:04 PM

வால்பாறை; நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையில், கடந்த மே மாதம் துவங்கிய தென்மேற்குப் பருவமழை கடந்த மாத இறுதியில் தீவிரமடைந்தது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னக்கல்லாறு, கூழாங்கல்ஆறு, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றுடன் கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர் கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.16 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,459 கனஅடி தண்ணீர் வரத்தாக, அணையிலிருந்து வினாடிக்கு, 1,567 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கும் திறந்து விடப்படுகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று, 12வது நாளாக நிரம்பிய நிலையில் காட்சியளித்தது.
இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 60.40 அடியாக உயர்ந்தது. 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக உயர்ந்தது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு: சோலையாறு - 27, பரம்பிக்குளம் - 20, வால்பாறை - 19, மேல்நீராறு - 39, கீழ்நீராறு - 33, காடம்பாறை - 7, வேட்டைக்காரன்புதுார் - 4, மணக்கடவு - 16, துாணக்கடவு - 3, பெருவாரிப்பள்ளம் - 5, பொள்ளாச்சி - 4 என்ற அளவில் மழை பெய்தது.