/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழையால் ஸ்தம்பித்த நகரம் கிராமங்களிலும் பாதிப்பு
/
கனமழையால் ஸ்தம்பித்த நகரம் கிராமங்களிலும் பாதிப்பு
கனமழையால் ஸ்தம்பித்த நகரம் கிராமங்களிலும் பாதிப்பு
கனமழையால் ஸ்தம்பித்த நகரம் கிராமங்களிலும் பாதிப்பு
ADDED : அக் 19, 2025 10:23 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், சில மணி நேரம் நீடித்த கனமழையால், நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் ஸ்தம்பித்தன.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், வரும் 23ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகரில், நேற்றுமுன்தினம் காலை முதல் மதியம் வரை, வெயில் சுட்டெரித்தது. மாலை, 6:30 மணிக்கு, கனமழை பெய்தது.
பல மணி நேரத்திற்கு மேலாக மழையின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தீபாவளி பண்டிகையொட்டி, புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு வாங்க மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.
பாதசாரிகள், இரண்டு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர். முக்கிய வழித்தடங்களில், இலகு மற்றும் கனரக வாகனங்கள், முகப்பு விளக்கை ஒளிர செய்து இயக்கப்பட்டன.
அதேநேரம், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்துடன் சாக்கடை கழிவு நீர் தேங்கியது சங்கடத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கரியகாளியம்மன் கோவில் வீதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதேபோல, மாக்கினாம்பட்டி, தேர்முட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ரோட்டை மூழ்கச் செய்து மழை வெள்ளம் பாய்ந்ததால், வாகன ஓட்டுநர்கள் திணறினர்.
ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீரும் சாக்கடை கழிவுநீரும் ரோடு முழுவதும் தேங்கியது.
பழைய பஸ் ஸ்டாண்டில், நிழற்கூரை இடிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்கு ஒதுங்க முடியாமல் பயணியர் பரிதவித்தனர். மழையின் தாக்கம் இரவு, 9:00 மணியை கடந்தும் நீடித்ததால், வீடு திரும்பும் சூழல் காரணமாக, பலரும் டூ வீலரில் நனைந்தவாறு பயணித்தனர்.
நேற்று காலை, நகராட்சி பணியாளர்கள், மழைநீர் வடிந்து செல்லும் பகுதிகளை, துார்வாரி சுத்தம் செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோல, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் அடைபட்ட இடங்களில், சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
வால்பாறை கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்குப்பருவ மழை பெய்யத்துவங்கியது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் ஆரம்பத்தில் சாரல்மழையாக துவங்கிய பருவ மழை கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது.
தொடர் மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 156.10 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 441 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு, 454 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக மேல்ஆழியாறில், 20 மி.மீ., மழை பெய்துள்ளது.
பொள்ளாச்சியில் 119 மி.மீ., நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,): சோலையாறு - 11, பரம்பிக்குளம் -40, ஆழியாறு - 85, வால்பாறை - 7, மேல்நீராறு - 7, கீழ்நீராறு - 5, காடம்பாறை - 10, மேல்ஆழியாறு -39, சர்க்கார்பதி - 6, வேட்டைக்காரன்புதுார் - 28, துணக்கடவு - 33, பெருவாரிப்பள்ளம் - 28, நவமலை -34, பொள்ளாச்சி - 119, நவமலை - -34, நல்லாறு -- 157, நெகமம் - -73.4.