ADDED : மே 28, 2026 04:56 AM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், கடை திறப்பார்களா என, குடிமகன்கள் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
டாஸ்மாக் மதுக்கடைகளில், காலி பாட்டில்களை வெளி முகமை வழியாக திரும்ப பெற வேண்டும் எனக்கூறி ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்கள், நேற்றுமுன்தினம் கடையை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவை மாவட்ட டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தெரியாததால், வழக்கம்போல நேற்று காலை 11:00 மணிக்கு 'குடி'மகன்கள் வந்தனர். மனமகிழ் மன்றங்களின் முன்பும், பகல் 12:00 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகளின் முன்பும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கடை திறக்காதது ஏன் என, கடை பணியாளர்களை போனில் கேட்டனர். அதன்பின்பே, போராட்டம் குறித்து தெரியவந்தது. ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
