/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கான சரிவிகித உணவு இதோ! பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்
/
குழந்தைகளுக்கான சரிவிகித உணவு இதோ! பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்
குழந்தைகளுக்கான சரிவிகித உணவு இதோ! பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்
குழந்தைகளுக்கான சரிவிகித உணவு இதோ! பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்
ADDED : அக் 04, 2025 11:31 PM

''அ தீத சத்துள்ள உணவுப்பொருட்களை, தேடி தேடி சாப்பிட கொடுப்போர் ஒருவகையினர் என்றால், எந்த ஆய்வும் செய்யாமல், விளம்பரமாக காட்சிப்படுத்தும் அனைத்தையும், குழந்தைகளுக்கு வாங்கித்தருவோர் மற்றொரு வகை அம்மாக்கள். இவ்விரு அம்மாக்களாலும், குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது,''என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் பூஜா சூரஜ்நாகேந்திரா.
பாலக்காடு பகுதியை சேர்ந்த பூஜா சூரஜ்நாகேந்திரா கூறியதாவது:
குழந்தைகளின் வளர்ச்சி நிலையை பிறந்து ஐந்து ஆண்டுகள், 5-10 வயது, 10-15 வயது என மூன்றாக பிரிக்கலாம். இதில், வயது, உயரத்திற்கு ஏற்ப, எடை குறைவா கவோ, அதிகமாகவோ இருந்தால், அது ஆரோக்கியமற்ற வளர்ச்சி நிலை. இதை சீராக்க, ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
உணவுத்தட்டு குழந்தைகளுக்கான உணவுத்தட்டை நான்கு பாகமாக பிரித்து கொண்டால், ஒரு பாகம் அரிசி, சப்பாத்தி, கஞ்சி என ஏதாவது ஒன்றாகவும், இரண்டாம் பாகம் காய்கறி, கீரை வகைகளாகவும், மூன்றாவது பாகம், சுண்டல், பச்சைபயறு, பன்னீர், கொழுப்புச்சத்து குறைவாக உள்ள சிக்கன், மட்டன், மீன் என ஏதாவது ஒன்றாகவும், நான்காவது பாகம் பழங்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒருநாளைக்கு உடலின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தரும் கார்போஹைட்ரேட், வளர்ச்சிக்கு உதவும் புரோட்டீன், கொழுப்பு சத்து, விட்டமின், தாதுக்களை உணவில் இருந்து பெற முடியும்.
தண்ணீர் எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு, வியர்வை, சிறுநீர் வழியாக, உடலில் இருந்து நீர் வெளியேறி கொண்டே இருக்கும். இதை ஈடுகட்ட தினசரி, குறைந்தபட்சம் 1-2 லிட்டர் தண்ணீராவது குடிப்பதை, உறுதி செய்ய வேண்டும்.
செரிமான சிக்கல் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு ஜீரணமாக, செரிமானம் சீராக, குடலின் இயக்கத்திற்கு,நார்ச்சத்து அவசியம். இது, கீரைகள்,பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, முளைகட்டிய சிறுதானியங்கள், சிவப்பரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி ஆகியவற்றிலும், அதிகமுள்ளது. குழந்தைகளுக்கான உணவில், இவற்றைஅடிக்கடி சேர்ப்பது அவசியம்.ஏனெனில், உடலின் இரண்டாவது மூளையாக கருதப்படும் செரிமான மண்டலத்தில், கழிவுகள் தேங்காமல் இருந்தால் தான், மற்ற உறுப்புகளின் இயக்கம் சீராக நடக்கும்.
உடற்பயிற்சி உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சீராக, சுறுசுறுப்புடன் இயங்கவும், உடற்பயிற்சி, யோகா என ஏதாவது ஒன்றில், குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். சூரியஒளி நேரடியாக உடலில்படும்போது தான், விட்டமின் டி சத்து கிடைக்கும். இது கால்சியம் சத்தை உணவில் இருந்து உறிஞ்சுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இப்படி, குழந்தைகளின் 15 வயது வரையிலான வளர்ச்சிக்கு, ஊட்டச்சத்துள்ள உணவுமுறை அவசியம். இது அடுத்த, 20-30 ஆண்டுக்கால உடலின் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றுகிறது. இதற்காக, இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை, அதிக விலை கொடுத்து வாங்கி கொடுக்க வேண்டியதில்லை.
உங்களின் இருப்பிடத்தை சுற்றி,பருவக்காலத்திற்கேற்பகிடைக்கும் காய்கறி, கீரைகள், பழங்கள், உணவுப்பொருட்களை சாப்பிட கொடுத்தாலே போதும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'சத்தான உணவு
தினமும் வேண்டாம்'
''மூன்று முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கு, அதீத சத்துள்ள உணவுகளை, தினசரி கொடுக்கக் கூடாது. துவக்கத்தில் வாரம் இரு நாட்கள் கொடுத்து, செரிமான சிக்கல் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பின், அவ்வுணவை அடிக்கடி கொடுத்து பழக்க வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள நுண்ணுாட்ட சத்துகளை, ஜீரண உறுப்புகளால் பிரித்தெடுக்க முடியும். இதில் தொய்வு ஏற்பட்டால், மலச்சிக்கல் ஏற்படலாம்,'' என்கிறார் பூஜா சூரஜ்நாகேந்திரா.