/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இதோ இப்படி ஒரு பிரச்னை
/
உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இதோ இப்படி ஒரு பிரச்னை
ADDED : டிச 03, 2024 06:43 AM
கோவை; உக்கடம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் பைபாஸில் செல்வோருக்கு, பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள் தெரிவதில்லை. அப்பகுதியில் விபத்து அபாயம் உள்ளதால், எந்நேரமும் போலீசார் நின்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. இப்பிரச்னையை தவிர்க்க, பஸ்கள் செல்லும் மையத்தடுப்பு பாதையை அடைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருக்கிறது.
உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு முன்பிருந்த, பஸ் ஸ்டாண்டில் மூன்று வழித்தடங்கள் இருந்தன. இரு இடங்களில் நுழைவாயில், ஒரு வழித்தடத்தில் பஸ்கள் வெளியேற வசதி செய்யப்பட்டு இருந்தது. மேம்பாலம் கட்டியபின், பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஒழுங்கற்று காணப்படுகிறது. இனி, மாநகராட்சி மூலம் புதிய வடிவமைப்புடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்கள், வாலாங்குளம் பைபாஸ்க்கு சென்று, உக்கடம் சந்திப்பில் திரும்பிச் செல்கின்றன. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும்போது, உக்கடம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்களுக்கு தெரிவதில்லை.
அதேநேரம், எதிர்புறமுள்ள பகுதியில் இருந்தும் வாகனங்கள் வருகின்றன. ஒரே இடத்துக்கு மூன்று வழித்தடத்தில் வாகனங்கள் வரும் சமயத்தில், விபத்து அபாயம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் கவனம் சிறிது சிதறினாலும் கூட, உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அப்பகுதி 'பிளைண்ட் ஸ்பாட்' என அறியப்பட்டுள்ளதால், 'ரவுண்டானா' அமைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது. அதற்கு சாத்தியமில்லை என அதிகாரிகள் கருதுவதால், தற்போதைக்கு சாலையின் மையத்தடுப்பை முழுமையாக அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள் அனைத்தும் இடதுபுறம் திரும்பி, 'ரவுண்டானா' வரை சென்று திரும்பி வர வேண்டும். இத்தகைய மாற்றம் செய்யும்போது, அனைத்து வாகனங்களும் ஒரே வழித்தடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்; விபத்து அபாயம் ஏற்படாது.
இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறுகையில், ''உக்கடம் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் வெளியேறும் பகுதிக்கு எதிரே உள்ள மையத்தடுப்பில் வாகனங்கள் செல்ல இடைவெளி விடப்பட்டுள்ளது. அந்த மையத்தடுப்பு அடைக்கப்படும். இனி, பஸ்கள் ரவுண்டானா வரை சென்று திரும்பி வந்தால், விபத்து பிரச்னை வராது,'' என்றார்.