/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாப்பநாயக்கன் பாளையம் உருவான வரலாறு இதோ!
/
பாப்பநாயக்கன் பாளையம் உருவான வரலாறு இதோ!
ADDED : டிச 23, 2025 05:21 AM
இ ன்றைக்கு கோவை நகரின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கும் பாப்பநாயக்கன்பாளையம், அரசு வருவாய் மற்றும் நிலப் பதிவுக் கணக்குகளில் இன்னும், 'கிருஷ்ணராயபுரம்' என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டு வருகிறது. அந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்த ராயர் வம்சத்தில், 1509 முதல் 1530 வரை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயன் ஆட்சிக்கால நினைவாகவே, கோவைப் பகுதியில் 'ராமகிருஷ்ணாபுரம்' என்ற ஊர் உருவானது.
சுமார் 150 ஆண்டுகள் சிறப்பாக விளங்கிய அந்த ஊர், குருடிமலைச் சாரலில் பெய்த பெருமழையால் சங்கனுார் பள்ளம் பெருகி, பெருமளவு மணல் கொண்டு வந்து ஊரையே மூடிவிட்டது. அந்தப் பள்ளம் மணலால் நிரம்பியதாலேயே, பின்னாளில் அது 'மணல்பள்ளம்' என அழைக்கப்பட்டது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உருவாக்குவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, பழைய ஊரின் பயன்பாட்டு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
வரலாற்றாசிரியர் அ.கி. நாயுடுவின் பதிவுகளின்படி, ராயகிருஷ்ணாபுரம் என்பது லட்சுமி மில்லுக்கு அடுத்த மணல்பள்ளத்துக்கு கிழக்காகவும், பெரிய பள்ளத்துக்கு மேற்காகவும், உடையாம்பாளையத்துக்கு வடக்காகவும், அவிநாசி சாலைக்குத் தெற்காகவும், சிறிய பரப்பளவில் இருந்தது.
அந்த ஊரில் சின்ன பாப்பநாயக்கர் மற்றும் பெரிய பாப்பநாயக்கர் என இரண்டு முக்கியத் தலைவர்கள் வாழ்ந்து வந்தனர். ஊர் மணலால் அழிந்தபோது, அவர்கள் மக்களை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மேடான பகுதிகளுக்குச் சென்று, புதிய குடியிருப்புகளை உருவாக்கினர். பூளைச் செடிகள் பூத்துக் குலுங்கிய மேட்டுப் பகுதி “பூளைமேடு” என அழைக்கப்பட்டது; காலப்போக்கில் அது பீளமேடு ஆக மாறியது. மற்றொரு பாப்பநாயக்கன் வந்து குடியேறிய ஊரே, இன்றைய பாப்பநாயக்கன்பாளையம்.

