/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானையை தடுக்க உருக்கு கம்பி வேலி; ஆய்வுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் குழு இன்று வருகை
/
யானையை தடுக்க உருக்கு கம்பி வேலி; ஆய்வுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் குழு இன்று வருகை
யானையை தடுக்க உருக்கு கம்பி வேலி; ஆய்வுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் குழு இன்று வருகை
யானையை தடுக்க உருக்கு கம்பி வேலி; ஆய்வுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் குழு இன்று வருகை
ADDED : செப் 03, 2025 11:23 PM
தொண்டாமுத்துார்; காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, வன எல்லையில் உருக்கு கம்பி வேலி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தலைமையிலான குழுவினர், இன்று கோவை வருகின்றனர்.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானைகள், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவை வனச்சரகத்தில் அட்டுக்கல் முதல் பொம்மணம்பாளையம் வரை 5 கி.மீ., போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அட்டுக்கல் பெரும் பள்ளம் முதல் தேவராயபுரம் வரை 5 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்கும் பணியை, ஏப்., மாதம் வனத்துறையினர் துவங்கினர்.
அங்கு, உருக்கு கம்பி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், உருக்கு கம்பி வேலி அமையும் இடங்களை, செப்., 5 மற்றும் 6ல் நேரில் ஆய்வு செய்வதாக தெரிவித்தனர்.
நீதிபதிகள் தலைமையிலான குழுவினர் இன்று கோவை வருகின்றனர். இன்றிரவு, மேட்டுப் பாளையத்தில் தங்கி, நாளை காலை (செப். 5) மேட்டுப்பாளையத்தில் உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடத்தையும், பகல் 1 மணிக்கு மேல், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட குப்பே பாளையம், ஆதிநாராயணன் கோயில் பகுதியில், உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடத்தை யும் ஆய்வு செய்கின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் ஒருங்கிணைந்து, நீதிபதிகளை சந்தித்து, தங்களின் நிலை குறித்தும் எடுத்துரைக்க உள்ளனர். நாளை மறுதினமும் (செப். 6) ஆய்வை தொடர இருக்கின்றனர்.
கனிமவள கொள்ளையிலும் ஒரு பார்வை வேண்டும்
தடாகம், பேரூர், மதுக்கரை உள்ளிட்ட பகு திகளில், மலையடிவாரத்தை ஒட்டியுள்ள, அரசு புறம்போக்கு மற்றும் தனியார் பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக கனிம வளக்கொள்ளை நடந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் நடந்து வருகிறது. கோவை வரும் நீதிபதிகள், கனிமவள கொள்ளை நடந்த இடங்களையும் நேரில் பார்வையிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.