'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்புகளை அகற்ற... சமுதாய கூடம் கட்டுவதற்கு அறிவுறுத்தல்
கோவை: வடவள்ளி அருகே பொது ஒதுக்கீட்டு இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி, சமுதாய கூடம் கட்டுவதற்கு, கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, 39வது வார்டு, வடவள்ளியில் உள்ள மகாராணி அவென்யூ பேஸ்-4ல், 11.10 ஏக்கர் பரப்பளவுள்ள இடம், நகர ஊரமைப்பு துறையில், 1987ல் அங்கீகாரம் பெறப்பட்டு, மனைகளாக விற்கப்பட்டுள்ளன.
இதில், 108 மனைகள் பிரிக்கப்பட்ட நிலையில், 10 சதவீதம் பொது ஒதுக்கீட்டு இடமான 1.10 ஏக்கரில், 56 சென்ட் பூங்காவுக்கும், 54 சென்ட் இடம் சமுதாயக் கூடமாக ஒதுக்கப்பட்டது.
சமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய இடத்தை, அப்போதைய வீரகேரளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் தானமாக ஒப்படைக்காமல், 12 மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் கிரையம் செய்து, கட்டடம் கட்டியுள்ளனர்.
2011ல் கோவை மாநகராட்சியுடன் வீரகேரளம் இணைந்த பிறகே, பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மாநகராட்சி நிர்வாகம் வேலி அமைக்க முயன்றபோது, அவ்விடங்களை வாங்கியவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
2020ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், மாநகராட்சிக்கு சாதகமாக தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
நீதிபதிகள் உத்தரவில், 'மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை வீட்டு மனைகளாக மாற்றுவது சட்டத்துக்கு புறம்பானது. வீரகேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் அளித்த அங்கீகாரம் சட்ட ரீதியாக செல்லாது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் சட்ட விரோத கட்டடங்கள். அவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சட்ட நடைமுறைகளை பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி, சமுதாய கூடம் கட்ட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாமல், அவ்விடங்களை மீட்டு, சமுதாய கூடம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், பல்வேறு குடியிருப்போர் சங்கத்தினர், பொது ஒதுக்கீடு இடங்களை மீட்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் இருக்கிறது.
தற்போது மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால், அவ்விடம் மீட்கப்படும் என்கிற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கைக்கு உயிரூட்டும் வகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டியது அவசியம்.