/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கிரஸ் உண்ணாவிரதம்; போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
/
காங்கிரஸ் உண்ணாவிரதம்; போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 06, 2025 10:02 AM

சென்னை:ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த, காங்கிரஸ் எஸ்.சி., பிரிவுக்கு அனுமதி வழங்கும்படி, மாநகர காவல் ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க, கடும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, சென்னையில் ஈ.வெ.ரா., நினைவிடம், காமராஜர் இல்லம், கருணாநிதி நினைவிடம், காந்தி மண்டபம், அம்பேத்கர் மணிமண்டபம் ஆகிய ஐந்து இடங்களில், ஏதாவது ஒரு இடத்தில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில், 'மனுதாரர் அனுமதி கோரும் இடம், போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடமல்ல. எனவே, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.
சிவானந்தா சாலை, ராஜரத்தினம் ஸ்டேடியம் ஆகிய இடங்கள் மட்டுமே போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்டவை என்பதால், இதில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து தெரிவித்தால், அனுமதி வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்க தயாராக இருப்பதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, 'ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, மனுதாரர் உடனே மாநகர காவல் கமிஷனருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.