/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவின் கொலை வழக்கு; சுர்ஜித் தாய்க்கு 'சம்மன்'
/
கவின் கொலை வழக்கு; சுர்ஜித் தாய்க்கு 'சம்மன்'
ADDED : ஆக 06, 2025 10:51 AM
சென்னை: கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி உள்ள, சுர்ஜித் தாயான எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி, வரும் 15ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், 27, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே, கடந்த, 27ம் தேதி கொல்லப்பட்டார்.
காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை தொடர்பாக, சுர்ஜித், 24, என்பவர் கைதாகி உள்ளார். இவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகின்றனர்.
கொலை வழக்கில், சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, இந்த கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொலை நடந்த இடத்தையும், காதல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், சுர்ஜித் தாயான எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி, வரும், 15ம் தேதிக்குள், திருநெல்வேலியில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.