UPDATED : மே 10, 2026 03:32 PM
ADDED : மே 10, 2026 02:20 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உயர்மட்ட பாலம் பணிகளை, தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையில் நிறைவு செய்யப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பணிளை அதிகாரிகள் கொண்ட குழு தரப்பரிசோதனை செய்யும் பணிகள், துறை ரீதியான உள் தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகில், தரைமட்ட பாலங்களை, உயர்மட்ட பாலங்களாக கட்டுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், கோவை நபார்டு, கிராமச்சாலைகள் கோட்டம் பொள்ளாச்சி நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உட்கோட்டத்தில், நெகமம் - எரிசனம்பட்டி ரோட்டில், 3.05 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இப்பணி, தணிக்கை குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. கோவை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர், ஆய்வினை மேற்கொண்டனர்.
இதில், பாலத்தின் தாங்கு சுவர், துாண்கள், அளவீடுகள் மற்றும் பாலம் கட்டுமானப்பணிகளின் அளவீடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் குமரன், கோவை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட பொறியாளர் இந்திரன், கோபிசெட்டிபாளையம் உதவி கோட்ட பொறியாளர் மோகன்ராஜ், பொள்ளாச்சி தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப்பொறியாளர் செல்வராஜ், நபார்டு உதவி கோட்ட பொறியாளர் பத்மா, கிராம சாலைகள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பங்கேற்றனர்.
