/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில் நிலைய மேம்பாடு உயர்மட்ட குழு ஆலோசனை
/
கோவை ரயில் நிலைய மேம்பாடு உயர்மட்ட குழு ஆலோசனை
ADDED : ஆக 25, 2025 10:03 PM

கோவை; சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால், கோவை, வட கோவை ரயில் நிலையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கோவை ரயில் நிலையத்தில், எம்.பி. ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், கோவை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
புதிதாக கட்டப்படும் பிரதான கட்டடத்தின் தோற்றம், அதில் பயணிகளுக்கான வசதிகள், நிர்வாக கட்டடம், மேல் மாடியில் கடைகளுடன் கூடிய பயணிகள் ஓய்விடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரயில் நிலைய வளாகத்தின் மாதிரி படத்தை வைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. ரயில்நிலையத்தை மையமாக வைத்து ரூ.51.72 கோடியில் செய்யவிருக்கும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்.பி.,ராஜ்குமார் கூறியதாவது:
கோவையில் இருந்து, திருச்செந்தூர், வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்கள், பெங்களூருவுக்கு இரவு ரயில், பொள்ளாச்சிக்கு கூடுதல் மெமு ரயில் சேவை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு, திருப்பூரை உள்ளடக்கிய சுற்று ரயில் சேவை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கொல்லம், போடி நாயக்கனூர் ரயில் சேவைகளை மீண்டும் துவக்குவதல், காரைக்காலுக்கு தினசரி ரயில், சேவை நீட்டிப்புகள், வந்தே பாரத்துக்கு கூடுதல் பெட்டிகள், போத்தனூர், வட கோவை ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் என நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கோட்ட மேலாளரும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதுதவிர, ஜி.ஆர்.பி. போலீசாருக்கு 33 குடியிருப்புகள், கிரேடு ஏ வகை போலீஸ் ஸ்டேஷன் கட்டடம், போலீசார் எண்ணிக்கையை அதிகரித்தல், போலீசாருக்கான வாகன நிறுத்துமிடம், பெண் போலீசாருக்கு பிளாட்பார்ம்களில் தனி ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் கோரியுள்ளோம்.
இவ்வாறு, எம்.பி.,ராஜ்குமார் தெரிவித்தார்.