/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரல்பட்டியில் உயர் மின்னழுத்தம் பிரச்னை; சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
/
வீரல்பட்டியில் உயர் மின்னழுத்தம் பிரச்னை; சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
வீரல்பட்டியில் உயர் மின்னழுத்தம் பிரச்னை; சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
வீரல்பட்டியில் உயர் மின்னழுத்தம் பிரச்னை; சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
ADDED : ஆக 05, 2025 11:43 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே வீரல்பட்டி கிராமத்தில், அடிக்கடி நிலவும் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன.
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் உள்ளது. விவசாயத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புறங்களில் அவ்வப்போது மின்சாரம் தடைபட்டு வருகிறது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வீரல்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இப்பகுதியில், டிரான்ஸ்பார்மர் கோளாறு காரணமாக, அடிக்கடி உயர் மின்னழுத்த தாக்கம் ஏற்படுகிறது.
அவ்வகையில், கடந்த வாரம் காலையில் ஏற்பட்ட திடீர் உயர் மின்னழுத்தம் காரணமாக நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், பல்புகள் வெடித்தன. தவிர, டி.வி., மின்அடுப்பு, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
தொடர்ந்து நிலவும் பிரச்னை காரணமாக, அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன், உயிர் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமோ என அச்சத்துடன் உள்ளனர்.
மேலும், பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, புகாரும் தெரிவிக்கப்படுகிறது.
கிராம மக்கள் கூறியதாவது: அன்றைய தினம் காலை நேரத்தில் அனைத்து வீடுகளிலும் சீரற்ற மின் வினியோகம் இருந்தது. உயர் மின் அழுத்தம் காரணமாக பல்பு, டி.வி., உள்ளிட்ட சாதனங்கள் வெடித்தன. பலரது வீடுகளில், அறியாமல் 'சுவிட்ச்' ஆன் செய்யப்பட்டபோது, அதிகப்படியான மின்சாதனங்கள் பழுதடைந்தன.
அப்போது, மின் இணைப்பை துண்டிக்க முற்பட்டு, சிலர் மின்சார தாக்குதலுக்கும் உள்ளாகினர். ஓரிருவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பணியில் இருக்கும் மின்வாரிய ஊழியரின் அஜாக்கிரதை, பராமரிப்பு இல்லாத டிரான்ஸ்பார்மர் காரணமாகவே இப்பிரச்னை நீடிக்கிறது.
இப்பகுதியில், மின்வாரிய உயரதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரவும், சம்பந்தப்பட்ட பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இது குறித்து தகவல் கிடைக்கப்பெறவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மின்வாரியத்தினர் தடையின்றி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.