/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேய்ச்சல் நிலத்தை தேடி ஆடுகளுடன் நடைபயணம்
/
மேய்ச்சல் நிலத்தை தேடி ஆடுகளுடன் நடைபயணம்
ADDED : செப் 20, 2024 10:08 PM

பொள்ளாச்சி : கோவை பாப்பம்பட்டியில் இருந்து, மேய்ச்சலுக்காக, 12 மணி நேரம் செம்மறி ஆட்டுடன், ஆடு வளர்ப்போர் நடைபயணமாக பொள்ளாச்சிக்கு வந்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு தென்னை மரங்கள், நெல் மற்றும் காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
மழை காலங்களில், தென்னந்தோப்புகளில் களைச்செடிகள் வளர்ந்து விடுகிறது. அவற்றை அகற்றும் வகையில் செம்மறி ஆடுகள் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக உள்ளது.
தற்போது, பொள்ளாச்சி பகுதியில் மழை பொழிவு இல்லாததால், வெளியூர்களில் இருந்து செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அதன் உரிமையாளர்கள் அழைத்து வரத்துவங்கியுள்ளனர்.
அதில், கோவை பாப்பம்பட்டியில் இருந்து, சூலக்கல், வடக்கிப்பாளையம், பொள்ளாச்சி வழியாக அம்பராம்பாளையம் பகுதிக்கு, 12 மணி நேரம் நடைபயணமாக வந்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தென்னந்தோப்புகளில் வளரும் களைச்செடிகளை அகற்ற, செம்மறி ஆடுகளை சில மாதங்கள் பட்டி அமைத்து வைப்பது வழக்கம். அவை, களைச்செடிகளை உட்கொள்வதுடன், அவற்றின் கழிவுகள், உரமாகவும் பயன்படும்.
இதனால், இயற்கையாக உரம் கிடைப்பதுடன், களைச்செடிகளை அகற்றி தோப்புகள் சுத்தமாகும்,' என்றனர்.