ADDED : ஜன 21, 2026 05:16 AM

மேட்டுப்பாளையம்: தண்ணீரின் அலைகளால், சாலையின் இருபக்கமும் அரிப்பு ஏற்பட்டு, சாலை சிறியதாக மாறியுள்ளது. சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமம் காந்தவயல். இந்த கிராமத்திற்கு லிங்காபுரத்தில் இருந்து, காந்தையாற்றின் குறுக்கே சாலையும், பாலமும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பெய்த மழையால், காந்தையாற்றில், 30 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதில் பாலமும், சாலையும் தண்ணீரில் மூழ்கின. சாலையின் இரண்டு பக்கமும், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சிறியதாக உள்ளது.
காந்தவயல் மலைவாழ் மக்கள் கூறியதாவது:
லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் வரும் சாலை, இரண்டு வாகனங்கள் செல்லும் அளவிற்கு இருந்தது. இதனால் விவசாய விளை பொருட்களை, இந்த சாலை வழியாக, விவசாயிகள் கொண்டு வந்தனர். ஐந்து மாதங்களாக அலைகளின் வேகத்தால் சாலையின் இரு பக்கமும், மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை சிறிதாக மாறி உள்ளது.
இதனால் சாலையில் ஒரு வாகனம் வரும்போது, எதிரே வரும் வாகனம் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தடுமாறுகிறோம். சாலையின் இரு பக்கமும் மண்ணை கொட்டி, அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
