/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்
/
போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்
ADDED : ஆக 16, 2025 09:26 PM

தொண்டாமுத்தூர்; சிறுவாணி வனப்பகுதியில், பெரியாற்றின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்ததை புனரமைக்காததால், பஸ் வசதி இல்லாமல், 4 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலை, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுவாணி வனப்பகுதியில், சாடிவயல், சீங்கபதி, பொட்டபதி, வெள்ளபதி, ஜாகீர் போரத்தி, சர்க்கார் போரத்தி ஆகிய மலை கிராமங்கள் உள்ளன.
இதில், சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில், பெரியாற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் உள்ளது. பொட்டபதி, வெள்ளபதி, ஜாகீர் போரத்தி, சர்க்கார் போரத்தி கிராமங்கள் மற்றும் சிறுவாணி அணை, சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஒரு பெரிய மரம் பாலத்தின் மீது விழுந்தது. இதில், பாலம் சேதமடைந்தது. அதிக கனமுள்ள வாகனங்கள் சென்றால், பாலம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
பொட்டபதி, வெள்ளபதி, ஜாகீர் போரத்தி, சர்க்கார் போரத்தி ஆகிய, 4 கிராமங்களில், சுமார், 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்காக, சிறுவாணி சர்வீஸ் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
பெரியாற்று பாலம் அபாயகரமான நிலையில் உள்ளதால், கடந்த ஏழு மாதங்களாக, சிறுவாணி சர்வீஸ் பஸ், இந்த நான்கு கிராமங்களுக்கு செல்லாமல், சாடிவயல் சோதனை சாவடி பகுதியுடன் திரும்பி செல்கிறது.
இதனால், இந்த நான்கு மலை கிராமங்களுக்கும், பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் தினசரி, பஸ் வசதி இல்லாததால், சாடிவயல் சோதனை சாவடிக்கு வந்தே, வேலைகளுக்கு செல்லவும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு செல்லவும், பஸ் ஏறி வருகின்றனர்.
இந்த மலை கிராமங்களில் இருந்து, 4 கி.மீ., தொலைவுள்ள சாடிவயல் சோதனை சாவடிக்கு வர, அப்பகுதியில் உள்ள மக்கள் இணைந்து, 500 ரூபாய் கொடுத்து, ஆட்டோவில் சென்று வருகின்றனர். காப்பு காட்டிற்குள் உள்ள பகுதி என்பதால், இப்பகுதியில், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற பணிகள், வனத்துறை மூலம் மட்டுமே செய்யப்படுகிறது.
சமீபத்தில், கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், சுமார், 7 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், பொதுமக்களுக்கு தேவையான இந்த பாலத்தை புனரமைக்கவில்லை. பாலத்தை புனரமைத்தால் மட்டுமே, அவ்வழியாக பஸ் இயக்க முடியும். எனவே, வனத்துறையினர், விரைந்து பாலத்தை புனரமைக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது,பாலம் புனரமைக்க நிதி கேட்டுள்ளோம். கிடைத்ததும் புனரமைக்கப்படும்,என்றார்.