தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எதிர்காலத்துக்கு காட்டிய 'ஜாடை' ஹிலாரிகாஸ்... எப்போதும் பக்கா 'மாஸ்'

 எதிர்காலத்துக்கு காட்டிய 'ஜாடை' ஹிலாரிகாஸ்... எப்போதும் பக்கா 'மாஸ்'

 எதிர்காலத்துக்கு காட்டிய 'ஜாடை' ஹிலாரிகாஸ்... எப்போதும் பக்கா 'மாஸ்'


ADDED : பிப் 16, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரந்து விரிந்த உலகில், படலமாய் படர்ந்திருக்கிறது அன்பு. நட்பு, காதல், பாசம், பரிவு இன்னபிற... இதனுடைய வடிவங்கள். பார்த்த தருணம், பார்க்காத பொழுது, நினைத்த யோசனை, நினைக்காத நாள் என, எல்லாமே, அன்புக்குள் கட்டுண்டு கிடக்கிறது. இந்த அன்பை விசாலமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப். 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடி வருகிறது, கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி.

'கலை' திருவிழா ஹிலாரிகாஸ். பல்வேறு கல்லுாரிகளின் மாணவ, மாணவியர், தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை. இன்று, பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் ஆளுமைகளுக்கு, கை கொடுத்த மேடை. நாளை வரப்போகும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு நிகழ்ச்சி.

நீங்க ஆடுங்க ப்ரோ... நாங்க இருக்கோம் உற்சாகப்படுத்த என, மாணவர் நட்புகள் கைத்தட்டி கைகொடுக்க, இவர்கள் ஆடிய பொழுது பறந்த புழுதி கூட, நடனம் ஆடியது. இளைஞர்களின் திறமைக்கு முகவரி கொடுக்கும் 'ஹிலாரிகாஸ்', ஒரு பக்கா 'மாஸ்' என்று தான் சொல்ல வேண்டும்.

'பயிற்சி செய், முயற்சி செய்'


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை எம்.பி., ராஜ்குமார்:

நம் நாட்டில் தான் இளைஞர் பட்டாளம் அதிகம். உற்சாகம் ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கையில் எக்காலத்திலும் படிப்பை மட்டும் விட்டு விடக்கூடாது. படிப்பு ஒன்று மட்டுமே, வருங்காலத்தை மட்டுமல்ல, உங்கள் தலைமுறையையே வாழ வைக்கும். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தாலே, அதுவும் வெற்றி தான். 'பயிற்சி செய், முயற்சி செய்' என்பது சாதாரண வார்த்தை அல்ல. வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லும் மந்திர சொல் இது.

முக்கிய நோக்கம்


வெற்றி கவிஞர் கவிதாசன்:

நட்பு மிக முக்கியம். அது, இதயத்துடிப்புக்கு சமம். பள்ளி கால நட்பை விட, கல்லுாரி காலங்களில் பூக்கும் நட்பு, இறுதி வரை தொடரும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நட்பில் இருந்தால், அதில் விரிசல் விழ வாய்ப்பே இல்லை. நண்பனின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைப்பவன் அல்ல நண்பன்; கண்ணீரே வராமல் தடுப்பவன் தான் சிறந்த நண்பன். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். வெற்றி தான் இளைஞர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். உயரம் என்றால் எவரெஸ்ட்; உயர வேண்டும் என்றால் Never Rest.

கற்றுக்கொண்டே இருக்கணும்!

கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்:

வாழ்க்கையில் உற்சாகமாக பறக்கக் கூடிய தருணத்துக்கான அச்சாரம் இது. ஒரு பக்கம் திறன், மறு பக்கம் படிப்பு. மாணவர்கள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது. போட்டிகள் நிறைந்த உலகில், தினம், தினம் அல்ல, நிமிடத்துக்கு, நிமிடம் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், கலைகளையும், மாணவர்கள் வாயிலாக வெளிக்கொணர்கிறோம். மகத்தான மனிதவளம் உருவாக்கி வருவது எங்களுக்கு பெருமை. ஏனென்றால், இந்துஸ்தான் ஒரு ஆலமரம்.

எனர்ஜி டானிக்

மேடையேறிய பிரபலங்களை கண்டு ஆரவாரம் அதிகரித்தாலும், அவர்கள் தெரிவித்த பல விஷயங்கள், கைத்தட்டலையும் வாரி இறைக்க தவறவில்லை.

'நான் யார்' என்ற தேடலை, எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தப் போகும் என்று ஆணித்தரமாக சொல்கிறார், '29' திரைப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார். உங்களுக்குள் நீங்களே கேட்டுப்பாருங்கள். இப்போதிருக்கும் இடம்; நாளைக்கு காத்திருக்கும் தடம் என பதில் சொல்லும் என, புதிர் வைத்து பேசினர், நாயகன் விது, நாயகி பிரீத்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்டோர்.

''ஆயிரம் முறை யோசியுங்கள். உங்கள் முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும். அடுத்த கட்ட நகர்வுக்கு இது சரியான வழி,'' என்றார், 'பிக் பாஸ்' புகழ் வியானா.

'யூத்' திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கும் கென், ''நான் சினிமா உலகில் நுழைவதற்கு உதவியது கலை நிகழ்ச்சிகள். ஒருவரின் திறமை இதில் தெள்ளத்தெளிவாக வெளிப்படும். எல்லோரும் ஜெயிக்கத் தான் பிறந்திருக்கிறோம்,'' என்றார்.

''தயக்கம், ஒருவரை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து விடும். சின்ன விஷயமாக இருந்தாலும், உங்களுக்கு சரி என்று தோன்றும் போது, தைரியமாக செயல்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். தோல்வி, வெற்றி என எது வந்தாலும், அது ஒரு பாடம்,'' என்றார், 'வசீகரா' பாடல் வாயிலாக கவர்ந்த பாடகி ரேஷ்மா சாம்.

''தோல்விகளுக்கு முழு உதாரணம் நானாகத் தான் இருப்பேன். நிறைய தோல்விகள் பார்த்து விட்டேன். இதில் துவண்டு விடாமல், ஒரு வித படியாக பார்க்கும் போது, எங்கும் தேங்கி விட முடியாது. மீண்டும் வரும் வழியை யோசிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ வேண்டும். ரசிக்க வேண்டும். ஒரு ரசிகனாக இந்த உலகை பார்க்கும் போது, கண்முன்னே நிறைய வழிகள் இருப்பது தென்படும்,'' என நடிகர் ஜீவா சொன்ன போது 'அப்ளாஸ்' அள்ளியது.

ஹிப் ஹாப் ஆதி, நடிகை ஸ்ரீலீலா ஆகியோர், 'புது உலகம் படைக்க... நல்லா படிங்க' என்று, நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தனர்.

அப்பப்பா... இவ்வளவு திறமைகளா...!

பிள்ளையார் சுழியாக, கலைநிகழ்ச்சிகளின் துவக்கமான பரதநாட்டியம். இயல்பாக துவங்கிய நிகழ்ச்சி, ஆரவாரத்தை கிளப்ப ஆரம்பித்தது. வெறும் திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே நடனத்தை வெளிப்படுத்தினாலும், சமூக கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிப்பட்ட நடனங்கள், பின்னிருக்கையில் இருந்தவர்களையும் அடடே... போட வைத்தது.

சமீபத்தில் வியக்க வைத்த ஒரு திரைப்படம் காந்தாரா. அதில் மெய்சிலிர்க்க வைத்த காட்சிகளை, மாணவ, மாணவியர் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்த விதம், அலங்காரம், அப்படியே திரையில் பார்க்கும் உணர்வை துாண்டின. இக்காட்சிகளை கண்ட பலரின் ஆன்மிகம், இன்னமும் நெருக்கம் காட்டியது.

கான்செப்ட்களை உருவாக்க, இன்றைய இளைஞர்களை விட்டால் ஆளில்லை என்பது போல், முகவரி கொடுத்தது ஒரு நடனம். தமிழ் திரையுலகில் வந்த பல 'அம்மா' பாடலை மையமாக கொண்டும், தங்களுக்கு தெரிந்த பாசத்தோடும், அம்மாவின் புகழ் பாடிய நடனம், ஒட்டுமொத்த அரங்கத்தின் ஸ்நேகமாக மாறியது.

போட்டின்னு வந்துட்டா... நாங்க எல்லா ஏரியாவுலேயும் கெத்து என்று மற்றவற்களுடன் இல்லை; தங்கள் குழுவினருக்குள்ளே போட்டியாக ஆடியது மிகப்பெரிய ஹைலைட். மாணவர்களை ஊக்குவிக்க வந்த நட்சத்திரங்களும், வியந்து பார்த்தது கண்கூடு. இனி அடுத்த வருடம் வரைக்கும் காத்திருக்கணுமா, அப்ப பாத்துக்கலாம் என்று, பிரியா விடை கொடுத்தனர் மாணவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us