ADDED : ஏப் 23, 2026 08:26 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் இந்து முன்னணி, தி.மு.க., இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையம் ஓட்டு சாவடியில் இந்து முன்னணியினர், பெண் வாக்காளர்களை ஆபாசமாக திட்டியதாக கூறி, தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. கணேசன் தலைமையிலான தி.மு.க.,வினர், இந்து முன்னணியினரை கைது செய்யக்கோரி, வெள்ளமடை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், மறியல் போராட்டத்தை, தி.மு.க.,வினர் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில்,' இரு தரப்பினரிடமும் புகார் பெற்று, வழக்கு பதிவு செய்யப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்.
