/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இல்லை! அச்சம் வேண்டாம்; டாக்டர் அறிவுரை
/
எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இல்லை! அச்சம் வேண்டாம்; டாக்டர் அறிவுரை
எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இல்லை! அச்சம் வேண்டாம்; டாக்டர் அறிவுரை
எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இல்லை! அச்சம் வேண்டாம்; டாக்டர் அறிவுரை
ADDED : ஜன 07, 2025 10:58 PM
பொள்ளாச்சி,; ''எச்.எம்.பி.வி., தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்,'' என மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்தார்.
சீனாவில், எச்.எம்.பி.வி., எனப்படும் ஹியூமன் மெட்டா நிமோ வைரஸ் பரவல் சமீபத்தில் அதிகரித்தது. நுரையீரலை தாக்கி சுவாச கோளாறு ஏற்படுத்தும் இந்த வகை தொற்று குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மூன்று மாத பெண் குழந்தை மற்றும் எட்டு மாத ஆண் குழந்தைக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் இரு குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களிடம் பதட்டம் ஏற்பட்டதுடன், மீண்டும் ஒரு வைரஸ் பரவலா என மக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து, அச்சமடைய வேண்டாம் என, மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் இந்த தொற்று யாருக்கும் இல்லை எனக்கூறிய மருத்துவமனை கண்காணிப்பாளர், அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்தார்.
இது குறித்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:
சீனாவில், 14வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதிக்க கூடிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று மழைக்காலத்தில் வரக்கூடிய ப்ளூ காய்ச்சல் போன்றது தான். இது பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளது.
14 வயது குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. தொண்டை வலி, சளி, உடல் அசதி போன்றவை அறிகுறியாக இருக்கும்.
வழக்கமான நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதுமானது. இதற்கு என, தனி சிகிச்சை, பரிசோதனை தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் எளிதில் குணமடைந்து விடலாம்.
பொள்ளாச்சியில் இந்த பாதிப்பு யாருக்கும் இல்லை; மழை காலத்தில் கொசுவால் பரவக்கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இது குறித்து பதட்டமடைய வேண்டாம் எனக்கூறியுள்ளது.
முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு கை கழுவதல் போன்றவை பின்பற்றினால் போதுமானாது. தொண்டை வலி, சளி, உடல் அசதி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், சரியான பின் பள்ளிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு, கூறினார்.

